கடந்த 19ம் தேதி இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப் பதிவு தமிழகம் முழுவதும் நடந்தது. இதில் மொத்தமாக 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குப்பதிவே நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நூறு சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் தொடர்ந்து மக்களிடம் வலியுறுத்திய நிலையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திய நிலையிலும் மக்கள் ஓட்டு போட போதிய ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை.
இதனால் பல பகுதிகளில், ஓட்டு சாவடிகள் அன்று காலை முதல் மாலை வரை மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி தான் காணப்பட்டது. பல இடங்களில் மிக மிக சொற்பமான எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் ஓட்டு போட ஆர்வம் காட்டினர். குறிப்பாக காலை 10 மணி வரையும் மாலை 4 மணிக்கு பிறகும்தான் சில ஓட்டு சாவடிகளில் மக்கள் கூட்டத்தை காண முடிந்தது.
நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை, மக்கள் மத்தியில் நம்பிக்கை சிறிதும் இல்லை. ஏனென்றால் ஒரு முறை நாடாளுமன்ற தேர்தல் வெற்றி பெற்று எம்பி ஆகி விட்டால், அந்த எம்பி பதவியில் இருக்கும் வரை மக்களை சந்திப்பதில்லை. மக்கள் குறைகளை தீர்ப்பதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களை காணவே முடிவதில்லை. குறிப்பாக தொகுதிப் பக்கமே அவர்கள் எட்டிப் பார்ப்பதில்லை என்ற அவல நிலைதான் உள்ளது.
அதுமட்டுமின்றி பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக என எந்த அரசியல் கட்சி மீதும் நடுநிலையான பொதுவான மக்களுக்கு நம்பிக்கையின்மையே நிலவுகிறது. ஏனென்றால் தொடரும் விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, ஜிஎஸ்டி, காய்கறி விலை, அத்யாவசிய பொருட்கள் விலை, வரிகள் உயர்வு, தொழில் பாதிப்புகள், மின்சார கட்டண உயர்வு போன்ற பல பாதிப்புகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எந்த கட்சிக்கும் ஓட்டு போட விரும்பவில்லை என்பதே உண்மை.
இந்நிலையில் ரத்னம் படத்தின் டைரக்டர் ஹரி திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கில்லி படம் ரி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பார்க்க திரண்ட கூட்டத்தில் பாதி கூட ஓட்டு சாவடிகளுக்கு வரவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இனி வரும் காலத்தில் இது போல் இல்லாமல் மக்கள் ஓட்டு பதிவு செய்ய ஆர்வமாக முன்வர வேண்டும். இன்னும் ஓட்டுப் பதிவு செய்ய வரும் மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஓட்டுப் போடுவது மக்களின் ஜனநாயக உரிமை. என்னுடைய நாட்டின் பிரதமரை நான்தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வரவேண்டும். ஆனால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து போனது மிகவும் வருத்தமளிக்கிறது என்று டைரக்டர் ஹரி கூறியிருக்கிறார். வரும் 26ம் தேதி இவரது இயக்கத்தில் ரத்னம் படம் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





