நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கமல்ஹாசன், சியான் விக்ரமை போலவே நடிப்புக்காக அதிக மெனக்கெடும் நடிகர்களில் ஒருவராக விஜய் சேதுபதி இருக்கிறார். நல்ல படங்களை சில நேரங்களில் தயாரிக்கவும் செய்கிறார். குறிப்பாக புதுமுக இயக்குனர்களுக்கும் அதிக வாய்ப்பளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் சியான் விக்ரம் போல அவரது மகன் துருவ் விக்ரமும் சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். ஆதித்ய வர்மா என்ற தனது அறிமுகப் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சேது விக்ரமை பார்ப்பது போலவே, அவரது நடை உடை பாவனை மட்டுமின்றி நடிப்பும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இன்றைய தமிழ் சினிமாவில், புதுமுக நடிகர்களாக அறிமுகமாகும் சில நடிகர்கள், மிக குறுகிய காலத்திலேயே நல்ல படங்களில் சிறந்த கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களின் கவனம் பெற்ற நடிகர்களாக மாறி விடுகின்றனர். அந்த வகையில் டாடா, லிப்ட் படங்களில் நடித்த வகையில், இப்போது ஸ்டார் படத்திலும் நடித்து வெற்றி நாயகனாக மாறியிருக்கிறார் நடிகர் கவின் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய், புதுமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இவர் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படத்தை இயக்க உள்ளார். இந்த படம் பான் இந்தியா படமாக 10 மொழிகளில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்னும் படப்பிடிப்பை துவங்காமல் ஓராண்டுக்கு மேலாக தாமதம் நீடிக்கிறது.
விஜய் தனது மகனை நடிகராக்க ஆசைப்பட்ட நிலையில், அவர் இயக்குனராக அதிக விருப்பம் காட்டியதால், விஜய் ஒரு கட்டத்துக்கு பிறகு ஜேசன் சஞ்சயை கண்டுகொள்வதில்லை. அதாவது, விஜய் அரசியலுக்கு செல்வதால் ஜேசன் சஞ்சய் தன் இடத்துக்கு வரட்டும் என விஜய் ஆசைப்பட்ட நிலையில், அவரது ஆசையை நிறைவேற்ற ஜேசன் சஞ்சய் அக்கறை காட்டவில்லை.
தனது முதல் படத்தில் நடிக்க நடிகர்கள் விஜய் சேதுபதி, துருவ் விக்ரம் மற்றும் சமீபத்தில் கவின் ஆகியோரை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். விஜய் மகன் என்ற மரியாதைக்காக அவரிடம் கதை கேட்ட 3 பேருமே, அந்த கதையில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. புதுமுக இயக்குனரான விஜய் மகன் மீதும் பெரிய நம்பிக்கை இல்லாததால், சரி பார்க்கலாம் என்று கூறி நழுவி விட்டனர். விஜய் மகனாக இருக்கலாம், அதுக்காக ரிஸ்க் எடுக்க முடியுமா என்பதே அவர்களது கேள்வியாக இருக்கிறது. இப்போது இயக்குனராகி விட்டேன். முன்னணி ஹீரோ கிடைக்கலையே என ஜேசன் சஞ்சய் புலம்பி வருகிறார்.





