நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக வலம் வந்தவர். அதாவது 1990களில், 2000ம் ஆண்டுகளில் வடிவேலு காமெடி இருந்தால் படம் ஓடிவிடும், லாபம் தந்துவிடும் என தயாரிப்பாளர்கள் கருதும் அளவுக்கு மிகப் பெரிய அளவில் அவரது காமெடி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
ஆனால் சினிமாவில் நடிக்க வந்த துவக்க காலத்தில், அவர் சாதாரண காமெடி நடிகராக தான் பார்க்கப்பட்டார். ஆனால் அடுத்தடுத்த படங்களில் நடித்து நடித்து அவர் காமெடி நடிப்பில் உச்சம் தொட்டார். அவரது காமெடியான டயலாக் டெலிவரியும், உடல் மொழியும், அவரது காமெடி காட்சிகளும் வேற லெவலில் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.
சிங்கமுத்து, மதுரை முத்துக்காளை, அல்வா வாசு, செல்லத்துரை உள்ளிட்ட காமெடி துணை நடிகர்கள் கொண்ட ஒரு குழுவை வைத்துக்கொண்டு, அவர் ஒரு காமெடி சாம்ராஜ்ஜியமே தமிழ் சினிமாவில் நிகழ்த்திக் காட்டினார் என்றால் அது மிகையல்ல. அதனால் வடிவேலுவின் ஒரு நாள் சம்பளம் ரூ. 10 லட்சம் முதல், ரூ. 12 லட்சம் வரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு வடிவேலு செய்த சில பிரச்னைகளால், அவருக்கு தமிழ் சினிமாத்துறை சார்பில், ரெட்கார்டு வழங்கப்பட்டு சினிமாவில் 10 ஆண்டுகள் வரை ஒதுங்கியிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் முன்பிருந்த காமெடி நடிப்பை அவரிடம் காண முடியவில்லை. முகம், குரல், பேசும் தொனி எல்லாமே மாறிப்போய் யாரோ ஒருவரது காமெடி போல்தான், வடிவேலு காமெடி ரசிகர்களுக்கு அன்னியமாகிப் போனது.
சந்திரமுகி 2 படத்தில், வடிவேலு காமெடி எடுபடவில்லை. அதே நேரத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்த மாமன்னன் படத்தில், குணச்சித்திர வேடத்தில் வடிவேலு நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை, வரவேற்பை பெற்றது. ஆனால் தொடர்ந்து அந்த மாதிரியான குணச்சித்திர வேடங்களில் நடிக்க வடிவேலு மறுத்துவிட்டார்.
இந்நிலையில் சன்டிவியில் செப் வெங்கடேஷ் பட் தலைமையில், டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற ரியாலிட்டி சமையல் போட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த போட்டி நிகழ்ச்சியில் வாரந்தோறும் நடிகர் வடிவேலு கலந்துக்கொள்ள இருக்கிறார். இப்படி வடிவேலு கலந்துக்கொள்ள ஒரு எபிஷோடுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்க்கெட் போன வடிவேலுக்கு சன்டிவி இத்தனை சம்பளத்தை அள்ளித் தர வேண்டுமா, என சின்னத்திரை பிரபலங்கள் புலம்பித் தீர்க்கின்றனர்.





