நடிகர் ராமராஜன், தமிழ் சினிமாவில் ஒரு நட்சத்திர நாயகனாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர். 1980, 90களில் ராமராஜன் படம் என்றாலே தியேட்டர்களில் திருவிழா கூட்டமாக இருக்கும். ரஜினி, கமல் படங்களுக்கு இணையாக, அவரது படங்களும் வசூலில் பெரிய எல்லைகளை தொடும். சாதாரண கிராமத்து கதை, காதல், மோதல், சென்டிமென்ட், இளையராஜா இசை, கவுண்டமணி செந்தில் காமெடி இதுதான் ராமராஜன் படமாக இருக்கும். படம் மாஸ் ஹிட் ஆகி விடும்.
குறிப்பாக கரகாட்டக்காரன் படம் பெரிய அளவில் வசூலில் சாதனை புரிந்தது. ரஜினிகாந்த் நடித்த மனிதன், கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படங்களுக்கு போட்டியாக இருந்தது. பல தியேட்டர்களில் கரகாட்டக்காரன் 365 நாட்கள் ஓடியது, பெரும்பாலான தியேட்டர்களில் 100, 125, 175, 200, 250 நாட்கள் என ஓடியது. படத்தை ரசிகர்கள் திரும்ப திரும்ப பார்த்து ரசிக்க படத்தின் காமெடி காட்சிகளும், இளையராஜா இசையில் பாடல்களும் தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைத்தன.
இப்படி உச்சத்தில் இருந்த ராமராஜன், திடீரென அதிமுக விசுவாசியாக மாறி, அரசியலில் ஆர்வம் காட்டினார். அவரது படங்களுக்கு இளையராஜா இசையமைக்க மறுத்த நிலையில், சில படங்கள் தோல்வியை தழுவியது. அதிமுக ராஜ்ய சபா எம்பி ஆக இருந்த ராமராஜன், தேர்தல் பிரசாரங்களில் தீவிரம் காட்டினர்.
ஒருமுறை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று விட்டு மதுரைக்கு காரில் திரும்பிய போது பெரிய விபத்து ஏற்பட்டது. கார் தடுப்பு சுவரில் மோதி டிரைவர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதில் பலத்த காயமடைந்த ராமராஜன், பல மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்தார். அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்து இப்போது சாமானியன் என்ற படத்தில் நடித்து, அந்த படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.
சாமானியன் படத்தில் ராமராஜன், ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், போஸ் வெங்கட், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராகேஷ் இந்த படத்தை டைரக்ட் செய்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ராமராஜனுக்கு ஜோடி இல்லை. வங்கியில் லோன் வாங்குபவர்களுக்கு மெசேஜ் சொல்லும் ஒரு படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.
சாமானியன் ராமராஜன், ஒரு வங்கிக்குள் நுழைந்து ஆயுதங்களை காட்டி மிரட்டி அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். போலீசார், மீடியா என வங்கியை சூழ்ந்துக்கொள்ளும் நிலையில், வங்கியை விடுவிக்க சாமானியன் ராமராஜன் வைக்கும் கோரிக்கை, வங்கியில் லோன் வாங்குபவர்களுக்கு நல்ல விழிப்புணர்வை தரும் படமாக, ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக படம் இருப்பதால், பல ஆண்டுகளுக்கு பின் ராமராஜன் கம்பேக் தந்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.





