நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் அமரன். கடந்த தீபாவளியன்று ரிலீஸ் ஆன இந்த படம், 2 வாரங்கள் கடந்து திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுவரை 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது.
சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் 3 நாட்களில், உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த முதல் படம் அமரன் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில், முகுந்த் வரதராஜன் மனைவி இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் சாய்பல்லவி நடிப்பு வேற லெவலில் இருந்தது படத்துக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது.
வழக்கமான திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 4 வாரங்கள் அல்லது 8 வாரங்கள் கழித்து ஓடிடி தளங்களில் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது. சில படங்களை ஓடிடி தளங்கள் அதிக விலை கொடுத்து வாங்க முன்வராததால் இன்னும் ஓடிடி தளங்களுக்கு வராமல் பல மாதங்களாக கிடப்பில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆரவாரமான வரவேற்பை பெற்றுள்ள அமரன் படம் 2 வாரங்களை கடந்துள்ளது. இன்னும் 2 வாரங்கள் கழித்து அமரன் படத்தை வெளியிட முடிவு செய்து, 4 வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தியேட்டர்களில் பார்த்த ரசிகர்கள், மீண்டும் தங்களது வீடுகளில் ஓடிடி தளங்களில் பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது,
இதற்கிடையே தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில், அமரன் படத்தை 8 வாரங்கள் கழித்த பிறகே ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் கூறுகையில், அனைத்து தியேட்டர்களிலும் அமரன் படம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் அமரன் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டும். நல்ல திரைப்படங்கள், மக்களை தியேட்டர்களுக்கு குடும்பம் குடும்பமாக வரவழைக்கும் என்பதற்கு அமரன் படம் பெற்ற வெற்றியே சிறந்த உதாரணம் என்று கூறியிருக்கிறார்.





