நடிகர் சிவக்குமாரின் இளை மகன், நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி அறிமுகமான படம் பருத்திவீரன். இந்த படத்தை டைரக்டர் அமீர் இயக்கி இருந்தார். துவக்கத்தில் சில வாரங்கள் மட்டுமே இந்த படத்தின் தயாரிப்பாளராக செயல்பட்ட ஞானவேல் ராஜா, பிறகு கையில் பணமில்லை என்று ஒதுங்கிக் கொள்ள, டைரக்டர் அமீரே பருத்திவீரன் படத்தை தயாரித்தார்.
இதற்காக தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கடன் வாங்கி படத்தை படாதபாடு பட்டு படத்தை தயாரித்து, டைரக்ட் செய்து முடித்திருக்கிறார் அமீர். இதை அந்த படத்தில் உதவி இயக்குனராக பணிசெய்த நடிகர், டைரக்டர் சமுத்திரக்கனி வெளிப்படையாக கூறியிருந்தார். அந்த படத்தில் பணிபுரிந்த நடிகர் சசிக்குமாரும், ஒரு பெரும் தொகையை, அமீருக்கு கடனாக கொடுத்திருப்பதும் பிறகு தெரிய வந்தது.
பருத்திவீரன் படம் தயாரான பிறகு, அப்போதைய திமுக அழுத்தம் காரணமாக, அமீர் அந்த படத்தை ஞானவேல் ராஜா தரப்புக்கு விட்டுக் கொடுத்த நிலையில், அமீருக்கு தயாரிப்பு செலவான வகையில் ரூ. 1.75 கோடி வரை அவர் தராமல் ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு, சென்னை ஐ கோர்ட்டில் 17 ஆண்டுகளாக நடந்து வருவதாக சில மாதங்களுக்கு முன் ஒரு நேர்காணலில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது அமீர் கூறியிருந்தார்.
இதையடுத்து, இயக்குனர் அமீர் குறித்து தயாரிப்பாளர் மற்றும் சிவக்குமாரின் குடும்ப உறவினரான ஞானவேல் ராஜா, தாறுமாறாக பேசியிருந்தார். தனிப்பட்ட முறையில் இழிவுப்படுத்திய அவர் பேசியதை பாரதிராஜா, கரு பழனியப்பன், சசிக்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் கண்டித்த நிலையில், மன்னிப்பு கேட்டு அந்த விவகாரத்தில் இருந்து உடனடியாக விலகி விட்டார் ஞானவேல் ராஜா.
இந்த விவகாரம் 2 மாதங்களுக்கு மேல், சமூக வலைதளங்களில் அனல் பறந்த நிலையில், இதுபற்றி நடிகர் சூர்யா எதுவுமே பேசவில்லை. இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். அதுகுறித்து, இயக்குனர் பாண்டிராஜ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, இந்த விவகாரம் குறித்து நீங்கள் ஏன் எதுவுமே பேச மறுக்கிறீர்கள் என்று சூர்யாவிடம் போன் செய்து கேட்டேன். நானும் இந்த பிரச்னையில் கல் எறிய வேண்டாம் என்று பார்க்கிறேன், என்றார். அப்படியல்ல, நீங்கள் சொன்னால்தானே உங்கள் தரப்பு நியாயமும் மற்றவர்களுக்கு புரியும் என்றேன்.
அதன்பிறகு சூர்யா, நான், 2டி ராஜசேகர் ஆகிய 3 பேரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்து, ஒரு அறிக்கை தயார் செய்தோம். ஆனால் அப்போது மருத்துவமனையில் விஜயகாந்த் தீவிர சிகிச்சையில் இருந்தார். அந்த நேரத்தில் இந்த அறிக்கை வெளியிடுவது சரியாக இருக்காது என அந்த அறிக்கையை வெளியிடவில்லை. அதன்பிறகு சூர்யா, விடுங்க சார். தாக்கப்பட்ட நான், தாக்கப்பட்டவனாகவே இருந்துவிட்டு போகிறேன், என்று கூறிவிட்டார். அந்த அறிக்கை மட்டும் வெளியே வந்திருந்தால், சூர்யா தரப்பு நியாயமும் வெளியே வந்திருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜ் கூறியிருக்கிறார்.





