தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னட மொழி என சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பும் கண்டனமும் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று கன்னட அமைப்புகள் எச்சரித்துள்ளன. அதனால் 20 கோடி ரூபாய் தனக்கு இழப்பு என்றாலும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று கமலும் முடிவாக இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் கமலுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் திரைப்படங்களை கடந்து இந்திய அளவிலும் அகில உலக அளவிலும் தனது படைப்புகளின் வாயிலாக தனி முத்திரை பதித்த ஒரு மூத்த கலைஞர். திரைப்படங்களையே தனது சுவாசமாகவும் உணர்வாகவும் உயிராகவும் சுமந்து வாழும் மகத்தான ஒரு படைப்பாளர்.
வெகுஜன மக்களை மட்டும் இன்றி அந்த மக்களின் பேராதரவையும் அபிமானத்தையும் ஈட்டிய பல திரை நட்சத்திரங்களின் மனதிலும் மதம் இனம் மொழி பேதமின்றி தனது பேரன்பாலும் திறனாலும் நிரந்தர இடம் பிடித்தவர். இந்திய மொழிகள் அனைத்திற்குமே உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் கமல்ஹாசன்.
ஒருமைப்பாட்டின் குரலாகவும் சகோதரத்துவத்தின் அடையாளமாகவும் திகழ்ந்து வருபவர். அதன் வெளிப்பாடாகவே கர்நாடகா கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மூலமாக கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் முன்னெடுத்து வருகிறார். என்றும் கன்னட மொழியை சீர்தூக்கி பார்க்கின்ற கமல் ஒருபோதும் சிறுமைப்படுத்தும் நோக்கம் இருந்ததில்லை என்பதை அவருடைய கடந்த கால நிகழ்வுகள் தரவுகளாக இருக்கின்றன.
இந்நிலையில் கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாய தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. சாதி மதம் இனம் மொழி என்ற எந்த பாகுபாடும் இன்றி மாநில, தேசிய எல்லைகளைக் கடந்து தனது வாழ்நாளை முழுவதுமாக கலைப்பணிக்கு அர்ப்பணித்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் இத்தகைய அநீதியை சுய சிந்தனையும் பகுத்தறிவு கொண்ட எவருமே அனுமதிக்கலாகாது. சுய ஆதாயங்களுக்காக குறிப்பிட்ட சிலர் கமல்ஹாசன் அவர்களை கருவியாக பயன்படுத்தி கன்னட – தமிழ் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்ய அனுமதிப்பது மிக தவறான முன்னுதாரணமாகவும் வரலாற்றில் ஒரு மாபெரும் கருப்பு புள்ளியாகவும் நிலைத்து விடக்கூடும்.
கர்நாடக மாநிலத்தின் அனைத்து அன்பர்களும் திரைத்துறை அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் கமல்ஹாசனின் உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாக உதித்த வார்த்தைகளின் உண்மையான பொருளை உணர்ந்து ஒரு மகத்தான கலைஞனுக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளை தடுத்து நிறுத்த முற்பட வேண்டும் என தமிழ் திரையுலகின் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் பேரன்புடன் கேட்டுக்கொள்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.





