தமிழ் சினிமாவில் பெரிய இயக்குனர்கள், பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் மட்டுமே பேசப்படுகிற நிலையை மாற்றி, அவ்வப்போது சில சின்ன பட்ஜெட் படங்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவை, வரவேற்பை பெற்றுவிடுகின்றன. அதற்கு உதாரணமாக காக்கா முட்டை, குட்நைட், பார்க்கிங், சித்தா போன்ற படங்களை குறிப்பிட்டுச் சொல்லாம்.
இத்தகைய படங்கள், கதையை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்களாக இருக்கின்றன. பிரமாண்டத்தையும், நட்சத்திர நடிகர்களை வைத்து ஏதேனும் ஒரு மொக்கை கதையை பட்டி, டிங்கிரிங் பார்த்து திரைக்களத்தில் இறக்கி விடும் பெரிய இயக்குனர்களுக்கு மத்தியில், மக்கள் மனம் விரும்பும் கதைகளை படமாக்கும் நல்ல இயக்குனர்களும் இருக்கவே செய்கின்றனர்.
அந்த வகையில் கடந்த ஆண்டில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் பார்க்கிங். மனிதனின் ஈகோ உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தி, அதை மையக்கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட படமாக இது இருந்ததால், பார்த்த ரசிகர்களுக்கு எல்லாம் பார்க்கிங் படம் மிகவும் பிடித்துப் போய்விட்டது.
மேல் வீட்டுக்கு கர்ப்பிணி மனைவியுடன் குடிவரும் படித்த இளைஞர், கீழ்வீட்டில் ஏற்கனவே குடியிருக்கும் அரசுத்துறை அதிகாரி. வீட்டுக்கு முன் இருக்கும் சிறிய இடத்தில் யார் காரை நிறுத்திக்கொள்வது என்பதுதான் இந்த படத்தின் மொத்த திரைக்கதையும். ஹரீஷ் கல்யாணும், எம்எஸ் பாஸ்கரும் ஆரம்பத்தில் சினேகிதமாக பழகி, கடைசியில் ஒருவரை ஒருவர் கொலை செய்ய மு்யற்சிப்பது வரை இந்த பார்க்கிங் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துவிடுகிறது.
காமெடி நடிகராக துவக்கத்தில் நடித்து, பிறகு குணச்சித்திர நடிகராக மாறி அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வரும் நடிகர் எம்எஸ் பாஸ்கர், இந்த படத்தில் வேற லெவலில் தனது நடிப்பை வில்லனாக அசத்தியிருப்பார். ஹரீஷ் கல்யாணும் பல காட்சிகளில் தன் நடிப்பில் ஸ்கோர் அடித்திருப்பார். மொத்தத்தில் இந்த படம், நம் வீட்டிலோ, பக்கத்து வீட்டிலோ நடக்கும் சம்பவம் போல இருக்குமே தவிர, ஒரு திரைப்படமாக மனம் உணராது.
பார்க்கிங் படத்துக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பார்க்கிங் படத்தை 2ம் பாகமாக எடுக்க, அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த படத்திலும் ஹரீஷ் கல்யாணும், எம்எஸ் பாஸ்கரும் மீண்டும் நடிக்கவே அதிக வாய்ப்புள்ளது. இந்த படத்துக்கு நோ பார்க்கிங் என பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பார்க்கிங் படத்தை 2ம் பாகமாக எடுக்க அதில் என்ன விஷயங்கள் உள்ளது, என்றும் ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.





