வாரிசு படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக லியோ படத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் படத்திற்குப் பிறகு இரண்டாவதாக லோகேஷ் கனகராஜ் உடன் அவர் இணைந்து பணியாற்றி இருக்கும் இந்த படம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.அதற்கு முக்கியமான காரணம் லோகேஷ் கனகராஜ் இதற்கு முந்தைய படங்களில் ஏற்படுத்திய எல் சி யு என்ற தாக்கம்தான். அவரது இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடிக்க, அதன் முடிவில் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து கமலுடன் விக்ரம் படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜ், அதில் கைதி படத்தின் முடிச்சுகளையும் விக்ரமில் காண்பித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். படத்தின் கிளைமாக்ஸில் ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் சூர்யா வந்ததும், விக்ரமை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. இந்த சூழலில் அவர் விஜயை வைத்து லியோ திரைப்படத்தை எடுப்பதால், இந்த படமும் எல் சி யு வில் வருமா என்று ரசிகர்கள் தினமும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
லியோ ஷூட்டிங் ஆறு மாதங்களில் நிறைவடைந்த நிலையில், படத்தின் பேட்ச் ஒர்க் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் இணைய பல இயக்குனர்களும் போட்டி போட்ட நிலையில், இறுதியாக அந்த வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்கு கிடைத்தது. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாகவும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

தற்போது லியோ சூட்டிங் பணிகளை முடித்து ஓய்வில் இருக்கும் விஜய், அக்டோபர் மாதம் வெங்கட் பிரபுவுடன் இணைவார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக எஸ் ஜே சூர்யாவும், நாயகியாக ஜோதிகாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. படத்திற்கு சிஎஸ்கே என தலைப்பு இடப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் வலம் வந்தது. அதுமட்டுமல்லாமல் வெங்கட் பிரபுவின் கூட்டணியில் ஒருவரான ஜெய்யும், இந்தப் படத்தில் இணைந்திருப்பதாக பேசப்படுகிறது.
நாளுக்கு நாள் விஜய் 68 படத்திற்கான தகவல்கள் வந்த வண்ணம் உள்ள இருக்க, உற்சாகமடைந்துள்ள விஜய் ரசிகர்கள் படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். தற்போது வெங்கட் பிரபு, விஜய் 68 படத்திற்கான முழு பணியில் ஈடுபட்டு வருகிறார். அக்டோபரில் சூட்டிங் ஆரம்பித்து அடுத்த ஆண்டு நிறைவடையும் என்றும், தீபாவளிக்கு படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது, அவரது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கீதை படத்திற்கு பின்னர் மீண்டும் இந்தக் கூட்டணி இணைவதால் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள நிலையில், விஜய்க்கு எந்த மாதிரி தீம் மியூசிக் யுவன் சங்கர் ராஜா பயன்படுத்துவார் என அவரது ரசிகர்கள் கற்பனைக் கோட்டை கட்டி வருகின்றனர். இந்த நிலையில், விஜய் 68 படத்திற்கான ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை எந்த திரைப்படத்திற்கும் இல்லாத வகையில், மிகப்பெரிய தொகையில் ஆடியோ உரிமை கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள விஜய் ரசிகர்கள், தளபதி 68-ன் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக காத்திருக்கின்றனர்





