தெலுங்கு திரை உலகத்தில் ஏராளமான நடிகர்கள் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். சிரஞ்சீவியில் தொடங்கி பவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், வெங்கடேஷ், ரவி தேஜா, அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா, மகேஷ்பாபு, பிரபாஸ், விஜய் தேவர கொண்டா என நட்சத்திர நடிகர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதில் மிக முக்கியமானவர், நடிகர் நாகார்ஜூன். தெலுங்கு சினிமாவில் எண்ணற்ற வெற்றிகளை கொடுத்திருக்கும் அவர், தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ரட்சகன் திரைப்படம் அவருக்கு இங்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. ஏ ஆர் ரகுமான் இசையில் அதன் பாடல்களும் ஹிட் ஆகின.
இருப்பினும் தொடர்ந்து தெலுங்கு படங்களிலே நடித்து வந்த அவர், மீண்டும் தோழா திரைப்படத்தில் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. எந்தவிதமான வன்முறை காட்சிகளும் இல்லாமல், மென்மையான திரைக்கதையின் மூலம் பின்னப்பட்டிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், நாகர்ஜுன் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுவும் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் எடுக்கப்படுகிறது. சேகர் கமுலா இயக்கும் இந்த திரைப்படத்திற்கு தனுஷ் தான் கதாநாயகன். குபேரா என இந்த திரைப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் போஸ்டரும் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதில் பிச்சைக்காரன் கெட்டப்பில் தனுஷ் இருந்தார். நாகர்ஜுனாவுக்கும் மிக முக்கியமான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இப்படியான சூழலில்தான் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. நாகர்ஜூன் மற்றும் தனுஷ் இருவரும் விமான நிலையத்திற்கு சென்ற போது, முதியவர் ஒருவர் ஆசை ஆசையாக நாகர்ஜுன் பக்கம் சென்றார்.
அப்போது பாதுகாவலர் ஒருவர் அவரை கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் தூக்கி எறிந்தார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது. பாதுகாவலர் தனது வேலையை செய்தாலும் இப்படி ஆக்ரோஷமாக நடந்து கொண்டது மிகவும் தவறு என்றும், முக்கியமாக இதனை நாகர்ஜுனா ஆமோதிக்காமல் அப்படியே கடந்து சென்றது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் பலர் கூறியிருந்தனர். தனுசும் இதனை கண்டு கொள்ளாமல் இருந்ததையும் அவர்கள் குறிப்பிட்டனர். வீடியோ இணையத்தில் வைரலானது. இதனால் பதறிப் போன நடிகர் நாகர்ஜூன் தற்போது மன்னிப்பு தெரிவித்து இருக்கிறார். இப்போதுதான் இதனை கவனித்தேன். இது நடந்திருக்கவே கூடாது. எதிர்காலத்தில் இது நடக்காமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறி இருக்கிறார்.





