வழக்கமாக சில படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும், ஆர்வமும் மிக அதிகமாக இருக்கும். ஆனால் படம் பார்த்த பிறகு அவர்களது எதிர்பார்ப்பு, பெரிய ஏமாற்றத்தையே தரும். ஏனெனில் டிரெய்லரில் மிக பிரமாண்டம் காட்டும் சில படங்கள், உண்மையில் அந்தளவுக்கு சிறப்பாக இருக்காது. அதற்கு சமீபத்திய உதாரணமாக கவின் நடித்த ஸ்டார் படத்தை சொல்லலாம்.
அதே நேரத்தில், மிக சாதாரணமாக இருக்கும் என்று ரசிகர்களும் அலட்சியமாக கருதப்படும் ஒரு படம், தியேட்டரில் மிகப்பெரிய பிரளயத்தை ரசிகர்களின் மனங்களில் உருவாக்கலாம். பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்ட ஒரு படமாக சமீபத்தில் வெளியாக மெகா ஹிட் படமாக ஓடிக்கொண்டிருக்கும் மகாராஜா படத்தை சொல்லலாம்.
அதே போல் பாகுபலி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு மாஸ் ஹீரோவாக உருவானவர் நடிகர் பிரபாஸ். பான் இந்தியா ஸ்டார் நடிகரான அவர் நடித்துள்ள படம்தான் கல்கி 2898 ஏடி. இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் நடித்துள்ளனர், வில்லன் கேரக்டரில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தின் 2ம் பாகமும் அடுத்ததாக வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்துக்கு, உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் மாநிலங்கள் வாரியாக சிலவற்றில் பெரிய ஆதரவும், சில மாநிலங்களில் 4 தினங்களிலேயே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வராத சூழலும்தான் நிலவுகிறது. எனினும் தமிழ்நாடு, கேரளத்தை பொருத்தவரை கல்கி 2898 பெரிய ஆதரவும், வரவேற்பும் பெறவில்லை.
ஆனால் தெலுங்கு மாநிலங்கள் ஆந்திரா, தெலங்கானாவில் கல்கி 2898 பெரிய ஒரு விஸ்வரூபத்தை கண்டிருக்கிறது. பிரபாஸ் ஒரு தெலுங்கு மொழி நடிகர் என்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களில், கல்கி ரூ, 21 கோடி வசூலை கடந்துள்ளது. உலகளவில் கல்கி படம் மூன்று நாட்களில் 500 கோடி ரூபாயை வசூலில் கடந்து சாதனை புரிந்துள்ளது.
அதிலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் கல்கி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆரவாரமான ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு தியேட்டர்களில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக கல்கி ஓடிக்கொண்டு இருக்கிறது. பெரிய தொழில்நுட்பங்கள் நிறைந்த ஹாலிவுட் படங்களுக்கு மத்தியில் கல்கி படத்தின் தொழில்நுட்பங்கள், பிரமாண்டம் மிக சுமார்தான். அப்படி இருந்தும் வெளிநாடுகளில் கல்கி படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, இந்திய சினிமாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.





