நடிகர் அஜீத்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கிய இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஜீத்குமார், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி முதல் 4 மாதங்களாக ஷூட்டிங் தடைபட்ட நிலையில், கடந்த ஜூன் 18ம் தேதி முதல் மீண்டும் அஜர்பைஜானில் ஷூட்டிங் நடந்து வருகிறது. அஜீத்குமார் அஜர்பைஜானில் நடந்த ஷூட்டிங் பங்கேற்று நடித்து வந்தார். இந்நிலையில் சென்னையில், அவரது மனைவி ஷாலினிக்கு முக்கிய அறுவை சிகிச்சை நடந்த நிலையில், இப்போது சென்னைக்கு வந்திருக்கிறார்.
நாளை ( 8ம் தேதி) மீண்டும் அஜர்பைஜான் செல்லும் அஜீத்குமார் இந்த மாதம் இறுதிவரை அஜர்பைஜானில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துக்கொள்கிறார். அவருடன் நடிகை திரிஷா நடிக்கும் முக்கிய காட்சிகளும் அங்கு படம் பிடிக்கப்படுகின்றன. குறிப்பாக அவர்கள் இருவரும் நடிக்கும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்படுகிறது.
அதன்பிறகு சென்னை திரும்பும் படக்குழு, ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஒரு சண்டைக்காட்சியை எடுக்கிறது. இது படத்தின் கிளைமேக்ஸில் அஜீத்குமார் பங்கேற்கும் முக்கிய சண்டைக்காட்சியாக உள்ளது. இந்த சண்டைக்காட்சியுடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைகிறது. அதன்பிறகு போஸ்ட் புரடக்சன் பணிகள் நடக்கின்றன.
இந்த படப்பிடிப்பு முடிந்த பிறகு, அஜீத்குமார் வெளிநாடுகளில் நடத்தப்பட உள்ள குட்பேட் அக்லி படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்துக்கொள்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் பிரதான வில்லன் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடிக்க உள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. வாலி படத்தை இயக்கிய எஸ்ஜே சூர்யா, அஜீத்குமாருக்கு வில்லனாக நடிப்பது பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இன்று இரவு விடாமுயற்சி படத்தின் செகன்ட் லுக் போஸ்டர்களை லைகா புரடக்சன்ஸ் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. ஒரு படத்தில் கார் ஓட்டுவது போலவும், மற்றொரு படத்தில் கையில் துப்பாக்கியுடன் அஜீத்குமார் நிற்பது போலவும் உள்ள இந்த இரண்டு போஸ்டர்களிலும் அஜீத்குமார் மாஸ் காட்டுகிறார். இப்படி செகன்ட் லுக் போஸ்டர்கள் இரண்டு வௌியிட்டு இருப்பது, ஏகே ரசிகர்களை, இரட்டிப்பு சந்தோஷத்தில் குஷிப்படுத்தி உள்ளது.





