நடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பில் அகரம் பவுண்டேசன் மூலம் பள்ளி மாணவ, மாணவியருக்கு பலவித நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 முடித்து முதன்முறையாக கல்லூரி செல்லும் மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் சிவக்குமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ் சினிமாவில் சூர்யா, கார்த்தியை விட மிகப்பெரிய நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிவக்குமார். குறிப்பாக எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர். மேலும் தமிழ் சினிமாவில் என்றும் மார்க்கண்டேயர் என்ற புகழுக்கு சிவக்குமார் சொந்தக்காரர். அவர் நடித்த காலகட்டத்தில் மதுப்பழக்கம், புகைப்பழக்கம், சக நடிகைகளுடன் தொடர்பு என்ற எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவர் என்று தமிழ் சினிமா துறையினரால், ரசிகர்களால் பாராட்டுகளை பெற்றவர்.
கடந்த 10 ஆண்டுகளாக, முதுமை காரணமாக சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சிவக்குமார், பொது விழாக்களிலும் தனது மகன்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்கிறார். அதே நேரத்தில் செல்பி எடுப்பவரின் மொபைல் போனை பிடுங்கி எறிவது, சால்வையை பறித்து வீசுவது போன்ற சங்கடமான செயல்களையும் செய்து சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார் சிவக்குமார்.
நேற்று அகரம் பவுண்டேசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவக்குமார் பேசியதாவது, நான் படி்ககிற காலத்தில் வறுமையில் மிகவும் சிரமப்பட்டேன். நான் பிறப்பதற்கு முன்பே என் தந்தை இறந்து விட்டார். அவர் கருப்பா, சிவப்பா என்பது கூட எனக்கு தெரியாது. என் அம்மாவின் அன்பால், ஆதரவால்தான் நான் வளர்ந்தேன்.
என் அம்மா, எங்கள் தோட்டத்தில் கூலி வேலை செய்து என்னை படிக்க வைத்தார். என்னை காப்பாற்றினார். பொங்கிய சோறு இல்லையா என்று கூட வறுமையான காலத்தில் என் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். பஞ்சம் நிறைந்த காலத்தில் ஒட்டகப் பால் குடித்திருக்கிறேன். கத்தாழை கிழங்கு சாப்பிட்டு இருக்கிறேன். பள்ளியில் குரூப் புகைப்படம் எடுக்க காசில்லாமல், அந்த புகைப்படத்தில் கூட என்னால் நிற்க முடியாமல் போனது.
சூர்யா, கார்த்தி இருவருமே நடிகர் சிவக்குமாருடைய மகன்கள். அவர்களை விட்டு விட்டு நீங்கள் என்னை தான் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு ஏழைத் தாயின் மகனாக இருந்து நான், இவ்வளவு பெரிய இடத்துக்கு வரக் காரணம், நான் கற்ற கல்வியும், நான் பின்பற்றிய ஒழுக்கமும்தான். என் அம்மாவுக்கு படிப்பறிவு இல்லை. வானம் பார்த்த பூமியாக 8 ஏக்கர் நிலம் வைத்துவிட்டு என் அப்பா போயிருந்தார். அதில் உழைத்து என் அம்மா என்னை உருவாக்கினார், என்று உருக்கமாக பேசினார் நடிகர் சிவக்குமார்.





