தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார் சுந்தர் சி. படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். டைரக்டர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்து, பின் உள்ளத்தை அள்ளித்தா படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய காமெடி படமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
நவரச நாயகன் கார்த்திக், இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். கவுண்டமணி செந்தில், மணிவண்ணன், ஜெய் கணேஷ், ரம்பா, ஜோதி மீனா, கசன்கான் என காமெடி கூட்டணி இந்த படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. அடுத்து அருணாசலம், அன்பே சிவம் போன்ற படங்களை இயக்கி சுந்தர் சி முன்னணி இயக்குரானார்.
அதைத் தொடர்ந்து தலைநகரம் என்ற படத்தில் நடித்து சுந்தர் சி கதாநாயகனாக மாறினார். இந்த படத்தை டைரக்டர் சுராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு பிறகு வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, இருட்டு போன்ற பல படங்களில் நடித்த சுந்தர் சி, பிறகு அரண்மனை அரண்மனை 2 மற்றும் 3 போன்ற படங்களிலும் அவரே நடித்தார்.
அவரே டைரக்ட் செய்து அவரே நடித்த வகையில், அந்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றன. இப்போது அரண்மனை 4 படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே அரண்மனை 3 பாகங்களாக வந்த நிலையில், இப்போது 4வது பாகமாக வெளிவருகிறது.
இந்நிலையில், ஒரு நேர்காணலில் சுந்தர் சி கூறியதாவது, நான் சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தை பார்த்தேன். அந்த படத்தில் எனது மூன்று படங்களை காப்பியடித்து, அந்த ஒரு படத்தை உருவாக்கி இருந்தார்கள். இதனால் எனக்கு பயங்கர கடுப்பு ஏற்பட்டது. ஒரு படத்தை காப்பியடித்து இருந்தால் கோபம் வந்திருக்காது. ஆனால் என்னுடைய மூன்று படங்களை அப்படியே தெலுங்கில் காப்பியடித்து வைத்திருந்தார்கள்.
நானும் நிறைய படங்களை காப்பியடித்து படம் எடுத்தவன்தான். அதனால் தெலுங்கில் இருந்து வின்னர் படத்தை காப்பியடித்து, சின்ன சின்ன காட்சிகளை மாற்றி எடுத்தேன். அதில் ஹீரோவை ஓடிவந்து விழ வைக்க ஹீரோயின் அழைப்பது போலவும், அப்போது நடுவில் வடிவேலு ஓடி வந்து கீழே விழுந்து அடிபடுவது போல காமெடி காட்சி எடுத்திருந்தேன். தெலுங்கில் ஒரு படத்தின் ட்ரெயிலர் வெளியானது. அப்போது வின்னர் பட காமெடி காட்சியை அப்படியே காப்பியடித்து எடுத்திருந்தனர். நான் தெலுங்கு படத்தில் இருந்து காப்பியடித்தது தெரியாமல், அதையே என் படத்தில் இருந்து அவர்கள் மீண்டும் காப்பியடித்தது செம காமெடியாக இருந்தது என்று கூறி இருக்கிறார் சுந்தர் சி.





