விடாமுயற்சி குட் பேட் அக்லி என ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்குமார். இதில் விடாமுயற்சி திரைப்படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவு பெற்றுள்ளன. ஆனால் அதன் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் பட்ஜெட் பிரச்சினை காரணமாகவே இந்த திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை என்று பலரும் கூறுகிறார்கள். இதனால் விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதில் இன்னும் சிக்கல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்குமார். இதுவரை யாரும் பார்க்காத அஜித்குமாரை திரையில் காட்டும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் அதன் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
எந்த ஒரு பேட்டி என்றாலும் தான் எப்போதும் அஜித் ரசிகன் என்பதை அடிக்கோடிட்டு காட்டும் ஆதிக் ரவிச்சந்திரன் நிச்சயம் இந்த திரைப்படத்தில் ஃபேன் பாய் சம்பவங்களை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றது போலவே அஜித்தின் தோற்றமும் அமைந்திருக்கிறது. முக்கியமாக முதல் போஸ்டரில் அவர் நடு விரலைக் காட்டி நக்கலாக சிரித்ததை பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இரண்டாவது போஸ்டரில் ஜெயில் கைதி யூனிஃபார்மில் அஜித் இருந்தார். அதில் அவர் அணிந்திருந்த கண்ணாடியில் பில்லா படத்தின் போஸ்டர் பிரதிபலித்தது. ஒருவேளை அந்த திரைப்படத்தில் நடித்த வேலுவின் கதாபாத்திரத்தின் நீட்சி தான் இதுவாக இருக்கும் என்று பலரும் ஆருடம் தெரிவித்தார்கள். இந்த சூழலில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் பிரசன்னா இருப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இணையத்தில் இது குறித்து அவரே பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதேபோல் கதாநாயகியாக திரிஷா நடிப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இப்படியான சூழலில் புதுவரவாக அர்ஜுன் தாஸ் குட் பேட் அக்லியில் இணைந்து இருக்கிறார். இதை உறுதிப்படுத்தும் விதமாக அவரே, பெரிய கடிதம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அஜித்திற்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.





