இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவிற்கு என்றே இங்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. முதலில் வசன கர்த்தாவாக தான் அவர் சினிமாவிற்குள் நுழைந்தார். ஆர்யா நடிப்பில் வெளியான ஓரம்போ திரைப்படத்தில் அவர் வசனங்களை எழுதி இருப்பார். ஆனால் இந்த திரைப்படம் பெரிதாக எடுபடவில்லை.
இந்த சூழலில் தான், தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் ஆரண்ய காண்டம் திரைப்படம் வெளியானது. தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத ஒரு களத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், அந்த நேரத்தில் வெற்றி பெறவில்லை. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும் அது பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. இப்படியான சூழலில் தான் ஆரண்ய காண்டம் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
அப்போது ரசிகர்கள் ஓடி தேடி போய் அந்த திரைப்படம் என்னவென்று பார்த்தார்கள். அந்த நேரத்திலிருந்து அவர்களின் பாதி பேர் தியாகராஜன் குமாராஜாவின் ரசிகர்களாகி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு ஆரண்ய காண்டம் திரைப்படத்தில் தனது இயக்கத்தில் திறனை வெளிப்படுத்தி இருப்பார் தியாகராஜன் குமாரராஜா. குறிப்பாக படத்தில் வரும் வசனங்கள் மிகவும் கூர்மையாக இருக்கும்.
இதனைத் தொடர்ந்து அஜித்குமார் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு, திரைக்கதை ஆலோசகராக தியாகராஜன் குமாரராஜா பணியாற்றினார். ஆரண்ய காண்டத்தில் வரும் சம்பத் கதாபாத்திரத்தின் சற்று தழுவலாக தான் விக்டர் கதாபாத்திரம் அதில் எழுதப்பட்டிருந்தது. சம்பத் ஓடிக்கொண்டே பேசுவது போன்று, அதிலும் விக்டர் கதாபாத்திரம் ஓடிக்கொண்டே தனது நினைவுகளை எடுத்துரைப்பது போன்று காட்சி இடம் பெற்றிருக்கும்.
இப்படியான சூழலில் தனது இரண்டாவது திரைப்படம் ஆக, சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கினார் தியாகராஜன் குமாரராஜா. விஜய் சேதுபதி, பகத் பாஸில், சமந்தா, மிஸ்கின், ரம்யா கிருஷ்ணன் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் இந்த திரைப்படம் தயாரானது. அதிலும் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து நம்மை அசர வைத்திருந்தார்.
நான்கு கதைகள் கொண்ட அந்தாலஜி படமாக இது உருவாக்கப்பட்டிருந்தது. மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது. 2019 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியான நிலையில் தற்போது அதனை தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். தெலுங்கில் தற்போதைக்கு பெரிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகாமல் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறதாம்.





