தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இளம் நடிகர்களின் நல்ல நடிப்பாற்றல் கொண்ட நடிகர் அருள்நிதி. திமுக குடும்பத்தை சேர்ந்த நடிகராக இருந்தாலும் சினிமாவில் அவர் எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் ஏற்று சிறப்பான நடிப்பை தந்து வருகிறார். அவர் அறிமுகமான முதல் படம் வம்சம் படத்தில் மிக இயல்பான தோற்றத்தில் வெகு யதார்த்தமாக அருள்நிதி நடித்திருந்தார்.
தொடர்ந்து மவுன குரு, ஆறாது சினம், களத்தில் சந்திப்போம், இரவுக்கு ஆயிரம் கண்கள், தகராறு, டிமாண்டி காலனி, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என பல படங்களில் அருள்நிதி சிறப்பாக நடித்திருந்தார். அதிலும் அஜய் ஞானமுத்து இயக்கிய திகில் படமான டிமாண்டிே காலனி படத்தில், மிரட்டலான நடிப்பை அருள்நிதி வெளிப்படுத்தி இருந்தார்.
கடந்த 2015ம் ஆண்டில் வௌிவந்த படம் டிமாண்டி காலனி. இந்த படத்திற்கு கேபா ஜெர்மியா இசை அமைத்திருந்தார். அருள்நிதியுடன் ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் ஜோசப், எம்எஸ் பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருந்தார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இந்த படம் ரசிகர்களை மிரட்டியது.
இப்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இன்று டிமாண்டி காலனி 2 வெளியாகி உள்ளது. இந்த படத்திலும் அருள்நிதியே நாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அருள்நிதி, டிமாண்டி காலனி 2 குறித்து கூறுகையில், டிமாண்டி காலனி முதல் பாகத்தில் இருக்கும் சில முக்கிய விஷயங்களை இரண்டாம் பாகத்தில் இயக்குனர் அஜய் ஞானமுத்து திரைக்கதையில் சிறப்பாக கொண்டு வந்துள்ளார்.
டிமாண்டி காலனி முதல் பாகத்தில் ஸ்ரீநிதி என்ற கேரக்டரில் நான் நடித்திருந்தேன். ஆனால் அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நான் இறந்து விடுவேன். அப்படிதான் அந்த காட்சியில் காட்டப்பட்டு இருக்கும். ஆனால் இரண்டாம் பாகத்தில் ரகு என்கிற கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன். டிமாண்டி காலனி 2ம் பாகம் பண்ணும்போதே இந்த படத்தின் தொடர்ச்சியாக 3ம் பாகம், 4ம் பாகம் படங்களுக்கான கதையை அஜய் ஞானமுத்து தயார் செய்துவிட்டார்.
அதனால் டிமாண்டி காலனி 4ம் பாகம் வரை கதைகள் தயாராக உள்ளது. ஆனால் அந்த படங்களின் வெற்றியை தொடர்ந்தே அடுத்தடுத்த பாகங்களை உருவாக்க இருக்கிறோம், என்று அருள்நிதி கூறியிருக்கிறார். அதாவது டிமாண்டி காலனி 2ம் பாகம் வெற்றி பெற்றால் 3ம் பாகம், அது வெற்றி பெற்றால் 4ம் பாகம் என, ரசிகர்கள் ஆதரவால்தான் அந்த பாகங்கள் படமாகும் என்று மறைமுகமாக சொல்லி இருக்கிறார் அருள்நிதி என்பது கவனிக்கத்தக்கது.





