நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ராயன். இது அவரது நடிப்பில் வெளியான 50வது படம். அதுமட்டுமின்றி இந்த படத்தை நடிகர் தனுஷ், எழுதி இயக்கி இருந்தார். அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கிய படம் போன்று இல்லாமல், இயக்குனர் வெற்றிமாறன் ஸ்டைலில் ராயன் படத்தை டைரக்ட் செய்ததாக ரசிகர்கள் தனுஷை பாராட்டியிருந்தனர்.
ராயன் படத்தில் துஷாரா விஜயன், அபர்ணா முரளி, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சரவணன், எஸ்ஜே சூர்யா, வரலட்சுமி சரத்குமார் என பல முக்கிய நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை பெரிய பக்கபலமாக இருந்து படத்தின் மாபெரும் வெற்றிக்கு உதவியது.
குறிப்பாக ராயன் பட பாடல்களில், ஏஆர் ரகுமான் மேஜிக் காட்டியிருந்தார். அடங்காத அசுரன்தான் பாடலை ஏஆர் ரகுமானும், தனுஷூம் இணைந்து பாடியிருந்தனர். அந்த பாடல், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு டிரண்டிங் ஆக மாறிவிட்டது. இந்த படத்தில் துஷாரா விஜயன், தனுஷின் தங்கையாக வேற லெவலில் நடித்து அசத்தியிருந்தார். இப்போது ரஜினியுடன் வேட்டையன் படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ், தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, திருப்பதி, மும்பை என பல பகுதிகளில் நடந்த நிலையில் ஷூட்டிங் ஏறக்குறைய முடிவடைந்து விட்ட நிலையில் இருந்தது.
இதுவரை எடுக்கப்பட்ட குபேரா படக்காட்சிகளை முழுமையாக பார்வையிட்ட இயக்குனர் சேகர் கம்முலா, சில காட்சிகளில் கூடுதலாக சில விஷயங்களை சேர்க்கவும், எடுக்கப்பட்ட சில காட்சிகளில் சின்ன சின்ன மாற்றங்களை செய்யவும் முடிவு செய்தார். அதனால் ரிஷூட் தேவையாக இருப்பதால் நடிகர் தனுஷிடம் மீண்டும் 10 நாட்கள் கால்ஷீட் கேட்டிருக்கிறார்.
50 நாட்கள் படப்பிடிப்பு, 50 நாட்கள் சம்பளம் ரூ 50 கோடி என்ற பாலிசியில் இருக்கும் நடிகர் தனுஷ், சேகர் கம்முலா கேட்டவுடன் உடனே ஓகே சொல்லி விட்டார். ஏனெனில் பல வெற்றிப் படங்களை தந்த முன்னணி இயக்குனர் சேகர் கம்முலா. குபேரா படம் சிறப்பாக வர வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் கூடுதலான நாட்கள் கால்ஷீட் கேட்பதால் முகம் சுளிக்காமல் ஓகே சொல்லி இருக்கிறார் தனுஷ். சினிமாவில் இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்டுகள் சாதாரணம்தான் என்றாலும், தனுஷின் இந்த செயலை குபேரா படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர்.





