தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனியான ஒரு கவனமும், வரவேற்பும், எதிர்பார்ப்பும் ஏற்படும். அந்த வகையில், மகாராஜா படம் தந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு வெளியாக உள்ள விஜய் சேதுபதியின் படம் என்பது இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பை டிரெயின் படத்தின் மீது ஏற்படுத்தி உள்ளது.
இந்த படம் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் இருக்கின்றன. டிரெயின் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். விஜய் சேதுபதியுடன் ஐரா தயானந்த் என்ற புதுமுக நாயகி நடித்துள்ளார். இந்த படத்தின் கதை முழுவதும் ரயிலில்தான் நடக்கிறது. தனது ரயில் பயண அனுபவங்களை வைத்து இந்த படத்தை மிஷ்கின் இயக்கி இருக்கிறார்.
கோவை மேட்டுப்பாளையம் – சென்னை ரயிலில்தான் இந்த படத்தின் சம்பவங்கள் நடப்பதாக காட்டப்படுகிறது. இதற்காக பல கோடிகள் செலவில் ரயில் செட் போடப்பட்டு அதில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. ரயிலின் உட்புற காட்சிகளை படம்பிடிக்க ஜெர்மனியில் இருந்து நவீனரக கேமரா வரவழைக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து சென்னை செல்லும் இந்த ரயிலில் பயணிக்கும் சக பயணியான விஜய் சேதுபதி, மற்ற பயணிகளுடன் பேசி அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்குவதுதான் இந்த படத்தின் மையக்கருவாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் பெயர் சந்திரபாபு என்று கூறப்படுகிறது.
டிரெயின் படத்தில் நீண்ட நாட்களுக்கு பின் வில்லன் கேரக்டரில் நாசர் நடித்துள்ளார். ஒரே ஷாட்டில் உருவான 5 நிமிட காட்சியில் நாசர் நடிப்பை பார்த்து படக்குழுவில் இருந்த பலரும் மிரண்டு போயிருக்கின்றனர். ரயிலில் கண்ட்ரோல் ரூம் ஏரியாவில் கேஎஸ் ரவிக்குமார், நரேன், சம்பத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தில் சிங்கம் புலி, சின்னப்பொண்ணு, ரேச்சல், ப்ரீத்தி, பிக்பாஸ் ஜனனி, யூகிசேது உள்பட பல முக்கிய நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படத்தில் 3 சண்டை காட்சிகள் வருகின்றன. இதற்காக வியட்நாமில் இருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த படத்தை டைரக்ட் செய்தது மட்டுமின்றி, மிஷ்கினே இசையும் அமைத்துள்ளார். பவுசியா பாத்திமா என்ற பெண் ஒளிப்பதிவாளர் இந்த படத்தை ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





