நடிகர் சூரி தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோ நடிகராக மாறியவர். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த விடுதலை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இன்னும் தாமதமாகலாம் என தெரிகிறது.
விடுதலை படம் தந்த அபரிமிதமான வெற்றியை தொடர்ந்து, துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் சொக்கன் கேரக்டரில் அசத்தலான நடிப்பை தந்திருந்தார். இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்போது அவரது படத்தில் கொட்டுக்காளி படமும் ரிலீஸாகி உள்ளது.
கொட்டுக்காளி படத்தை கூழாங்கல் பட இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கி உள்ளார். இந்த படம் பின்னணி இசை இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. வித்யாசமான கதைக்களத்தில் உருவான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. வரும் நாட்களில் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நடிகர் விஜயுடன் நடிகர் சூரி ஜில்லா படத்தில் நடித்திருந்தார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கியுள்ள நடிகர் விஜய், கடந்த 22ம் தேதி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். மேலும் பனையூரில் உள்ள தலைமை கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய விஜய், கட்சி பாடலையும் வெளியிட்டார். தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என்ற பாடல் டிரண்டிங் ஆனது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி கொடி அறிமுகம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நடிகர் சூரி, அண்ணனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இன்று மக்களுக்கான தலைவராகி விட்டார். நாளை அவர் எண்ணம் போல் எதுவாக விரும்புகிறாரோ, அதுவாகவே ஆகி மக்களுக்கு கண்டிப்பாக நல்லது செய்வார் என்று நம்புகிறேன், என்று கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய், வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு எதிராக தேர்தல் களத்தில் இறங்கி, ஆட்சியை பிடித்து முதல்வராகும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், அவரது எண்ணம் போல அவர் ஆவார் என்று நடிகர் சூரி கூறியிருப்பது, வருங்கால முதல்வராக திமுகவில் கூறப்படும் உதயநிதியை நிச்சயமாக கோபம் கொள்ள வைக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.





