அஜித்குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இதில் விடா முயற்சி திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கியிருப்பது நம் அனைவருக்கும் தெரியும். அஜர்பைஜான் நாட்டில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் தற்போது, ஐதராபாத்தில் மீதம் உள்ள பணிகள் தொடங்கியுள்ளன.
அதேசமயம், குட் பேட் அக்லி திரைப்படத்திற்கான பணிகளும் வேகம் எடுத்துள்ளன. திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், மார்க் ஆண்டனி ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
அஜித் குமாரின் தீவிர ரசிகனாகிய அவர், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் சூட்டிங்கின் போதே தனது திரைப்படத்திற்கான கதையை கூறியிருக்கிறார். அப்போது அஜித் ஒரு மாஸ் படத்தை எடுத்து விட்டு இந்த திரைப்படத்திற்கு சென்றால் நன்றாக இருக்கும் என்றும், அதற்கு முதலில் தயாராகும் மாறும் கூறி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தான் மார்க் ஆண்டனி திரைப்படத்தை எடுத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். தற்போது அஜித்தை வைத்து அவர் குட் பேட் அக்லி திரைப்படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தெலுங்கின் முன்னணி நிறுவனமான மைத்திரி மூவிஸ் நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் இதுவரை பார்த்திராத அஜித்தை நாம் காணலாம் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதற்கு ஏற்றது போலவே அஜித்தின் தோற்றமும் இருந்தது. கலர் கலரான சட்டை, விதவிதமான கூலிங் கிளாஸ், உடல் முழுவதும் டாட்டூ என படுஜோராக காட்சியளித்தார் அஜித்குமார்.
அடுத்ததாக தென்னாப்பிரிக்காவில் இந்த படத்திற்கான சூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் ரெபரன்ஸ் இருக்கும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பது உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே திரிஷா அஜித்துடன் இணைந்து ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் மற்றும் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இப்படியான சூழலில்தான் தற்போது அவர் ஆறாவது முறையாக இணைந்துள்ளார்.





