நடிகர் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் நேற்று வெளியானது. முதல் நாளிலேயே இந்த படம் தமிழ்நாட்டில் 38.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.95 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்பட்டாலும் அது உறுதிப்படுத்திய தகவலாக இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரது இசையில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 4 பாடல்கள் வெளியாகின. ஆனால் முதலில் வெளியான 3 பாடல்களுமே பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
இதனால் யுவன் சங்கர் ராஜாவுக்கு பதிலாக அனிருத் அல்லது ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தால் இந்த படத்தின் பாடல்கள் வேற லெவலில் இருந்திருக்கும் என தளபதி விஜய் ரசிகர்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டனர். இதுகுறித்த கமணெ்டுகளால் யுவன் சங்கர் ராஜாவே அப்செட் ஆனதாகவும் கூறப்பட்டது.
விஜய் நடித்த புதிய கீதை என்ற படத்துக்கு பிறகு 2வதாக யுவன் சங்கர் ராஜா இசையமைத்தது தி கோட் படத்துக்குதான். அதுவும் விஜயே, வெங்கட்பிரபுவிடம் உங்களது படங்களில் யுவன் இசை நல்ல காம்பினேஷாக இருக்குமே என்று சொன்னதால்தான் யுவன் சங்கர் ராஜாவை புக் செய்தேன் என்றும் வெங்கட்பிரபு கூறியிருந்தார்.
ஆனால் தி கோட் படம் வெளியான பிறகு படத்தில் பின்னணி இசை, பாடல்களில் ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா என்று பரவலாக பேச்சு அடிபடுகிறது. பாடல்களில் சற்று ஏமாற்றம் தந்த யுவன், பின்னணி இசையில் தன் முழு திறமையை காட்டி விட்டார் என்றும் ரசிகர்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் யுவன் சங்கர் ராஜா கூறியிருப்பதாவது, அன்பு மிக்க நன்றி தோழர்களே, தளபதியின் மீதான என் அன்பை காட்ட இந்த வாய்ப்பை வழங்கிய ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் அர்ச்சனா, ஐஸ்வர்யா, அகோரம் சாருக்கு நன்றி. கண்டிப்பாக எனக்கு பிடித்தமான அண்ணன் வெங்கட்பிரபு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது, என்று அதில் யுவன் சங்கர் ராஜா கூறியிருக்கிறார்.





