மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான கோட் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. எதிர்பார்த்த விமர்சனத்தை இந்த திரைப்படம் பெறவில்லை என்றாலும், எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்து இருப்பதால் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
குறிப்பாக படத்தில் வெங்கட் பிரபு செய்த சில விஷயங்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. குறிப்பாக, படத்தின் முதல் காட்சியிலேயே விஜயகாந்த் வந்தது திரையரங்குகளில் விசில் சத்தத்தை பறக்கத் செய்தது.
அதிலும் மட்ட பாடலுக்கு திரிஷா போட்ட குத்தாட்டம், இறுதிக்காட்சியில் சிவகார்த்திகேயன் வந்தது, கிளைமாக்ஸில் உபயோகப்படுத்தப்பட்ட தல என்னும் வார்த்தை, அப்போது ஒலிக்கப்பட்ட மங்காத்தா தீம், செல்போனில் இடம் பெற்ற கங்குவா போஸ்டர் என அனைத்தும் கனகச்சிதமாக இருந்ததால் படத்தை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.
விஜய் ரசிகர்களைத் தாண்டி அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்கு நல்ல விமர்சனத்தை கொடுத்துள்ளனர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். படத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்களும் தனது பங்களிப்பை சரியாக செய்திருப்பதால், கோட் திரைப்படம் பேசப்பட்டு வருகிறது.
இப்படியான சூழலில் திடீரென கோட் திரைப்படத்தை எடுத்த ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தை, அஜித் ரசிகர்கள் இணையத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அந்த நிறுவனம் செய்த ஒரு செயல்தான். எக்ஸ் வலைதளத்தில் அஜித்தை பற்றி கிண்டலடிக்கும் விதமாக இருந்த பதிவை, ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் ரீட்விட் செய்துள்ளது.
இதனால் கடும் கோபத்திற்கு ஆளான அஜித் ரசிகர்கள், தரம் கெட்ட ஏஜிஎஸ் என ஹேஷ்டேக் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் சமீபத்தில் விஜய் மகளாக நடித்தவர் அளித்த பேட்டியில், இறுதி காட்சியில் தான் தல என குறிப்பிட்டது தோனியை தான் என்று கூறியிருக்கிறார். இதனால் கடும் கோபமடைந்த அஜித் ரசிகர்கள், பிறகு எதற்கு அங்கு மங்காத்தா தீம் ஒலிக்கப்பட்டது என்று கேள்வி கேட்டு, அவரையும் வறுத்து எடுத்து வருகின்றனர். வெங்கட் பிரபுவையும் அவர்கள் விட்டு வைக்காமல் கேள்வி எழுப்பி வருவதால், இணையத்தில் வார்த்தை மோதல் முற்றியிருக்கிறது.





