தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவராக நடிகர் மணிகண்டன் இருந்து வருகிறார். காலா படத்தில் ரஜினியின் மகன்களில் ஒருவராக மணிகண்டன் நடித்திருப்பார். அப்போதே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த படத்தில் பல காட்சிகளில் அவரது நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து ஜெய்பீம் படத்தில் மணிகண்டன் நடிப்பு வேற லெவலில் இருந்தது. குறிப்பாக போலீஸ் லாக்கப்பில் அவரை அடித்து சித்ரவதை செய்யும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களை எல்லாம் பதைபதைக்கும் செய்யும் விதமான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மணிகண்டன்.
குறட்டை பழக்கத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குட்நைட் படத்தில் மோட்டார் மோகன் கேரக்டரில் மணிகண்டன் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. தொடர்ந்து லவ்வர் படத்திலும் இன்றைய காதலர்களின் எமோஷனலை மிக அற்புதமாக வெளிப்படுத்தி நடித்திருந்தார் மணிகண்டன்.
தொடர்ந்து படங்களில் நடித்துவரும் மணிகண்டன், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து வருகிறார். அதனால் அவருக்கு நடிப்பும், திரைக்கதையும் சேர்ந்து வருவதால் இரண்டிலுமே ஆர்வம் காட்டி வருகிறார். மணிகண்டன் பற்றி பலரும் அறியாத விஷயம், அவர் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதுதான்.
நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், அஜீத்குமார், ஜனகராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் குரலில் அச்சு அசலாக அப்படியே பேசும் வல்லமை மிக்கவர் நடிகர் மணிகண்டன். அதனால் விழா மேடைகளில் அவர் ஏறினால் கூட தொகுப்பாளர்கள் ரஜினிகாந்த் போல பேசச் சொல்வது வழக்கமாக நடக்கிறது. நேர்காணல்களில் கூட ரஜினி, ஜனகராஜ் போல பேசி அசத்தி விடுவார் மணிகண்டன்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள தி கோட் படத்தின் ஆரம்ப காட்சியில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் வந்து பேசுவது போல் காட்சியிருக்கும். அப்போது அவர் பேசும் குரல் அடிக்கடி மாறி, பின்பு அது விஜய் என தெரிய வரும். அந்த காட்சியில் ஏஐ தொழில்நுட்பத்தில் வந்த விஜயகாந்துக்கு பின்னணி குரல் கொடுத்தது நடிகர் மணிகண்டன்தான். அவர்தான் விஜயகாந்த் குரலில் அச்சு அசலாக மிமிக்ரி செய்து டப்பிங் பேசியிருக்கிறார். ஆனால் அந்த காட்சி சொதப்பியதால் மணிகண்டன் பெயர் பெரிய அளவில் வெளிவராமல் போய்விட்டது.





