உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தசெ ஞானவேல் இயக்கிய படம் ஜெய்பீம். இந்த படம் லாக்கப் விசாரணையின் போது போலீசாரின் கொடூர தாக்குதலால் கைதிகள் உயிரிழப்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.ஆஸ்கார் விருதுக்கும் ஜெய் பீம் படம் அனுப்பப்பட்டது.
இப்போது தசெ ஞானவேல் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்தை இயக்கியுள்ளார். லைகா புரடக்சன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மனசிலாயோ பாடல் நேற்று மாலை வெளியாகி டிரண்டிங் ஆகி வருகிறது. வரும் அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆகிறது.
வேட்டையன் படத்தை தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி மற்றும் ஜீவஜோதி வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி வழக்கு 18 ஆண்டுகளாக நடந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் ராஜகோபால் உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் தோசை கிங் என்று அழைக்கப்பட்டவர் சரவணபவன் ராஜகோபால். தனது கடின உழைப்பால் சரவணபவன் உணவகத்தை உலக அளவில் பிரபலப்படுத்தியவர். ஆனால் அவர் இரண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் மூன்றாவதாக திருமணம் செய்தால் பெரிய செல்வந்தர் ஆகலாம் என்ற மூட நம்பிக்கையில், ஜீவஜோதி என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்தார். இதற்கு ஜீவஜோதி சம்மதிக்காத நிலையில் அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை ஆள் வைத்து கடத்தி கொலை செய்ததாக ராஜகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்த நிலையில் ராஜகோபால் உள்ளிட்ட இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் உயர்நீதிமன்றம் ஆயுர் தண்டனை வழங்கியது. ராஜகோபால் சிறைக்கு சென்றார். உடல் நலக்குறைவு ஏற்பட்டு ராஜகோபால் தனது 2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது வாழ்க்கையை தசெ ஞானவேல் டைரக்ட் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஜெய் பீம் போன்ற ஒரு உண்மைச் சம்பவத்தை மிகப் பிரமாதமான படத்தை தந்த தசெ ஞானவேல் இதுபோல் தனிநபர் ஆசைநாயகி மீது கொண்ட மோகத்தால் அவர் வாழ்க்கையைபடுகுழியில் தள்ளியதை ஒரு படமாக எடுக்க வேண்டுமா என்று தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போதே விமர்சிக்க தொடங்கி விட்டனர். ஜங்லி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு தோசா கிங் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் 20 ஆண்டுகளுக்கு முன் நான் நேரில் பார்த்த கதையை பகிர்ந்துக்கொள்ள எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு என்று இயக்குனர் தசெ ஞானவேல் கூறியிருக்கிறார்.





