நடிகர் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று ரசிகர் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து நாட்களில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூல் என்ற நிலையில் உலகம் முழுவதும் தி கோட் படத்துக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் இந்த படம் எதிர்பார்த்த மாதிரியே ரூ. 1000 கோடி வசூலை எட்டவும் அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் நடத்த திட்டமிட்டு இருந்தார். வரும் 23ஆம் தேதி இந்த மாநாடு நடப்பதாக இருந்தது. அதற்காக பிரமாண்டமான விழா மேடை, பந்தல் அமைத்தல் போன்ற பணிகள் கலை இயக்குனர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
மேடை அமைப்பதற்கான ப்ளூ பிரிண்ட் எடுக்கப்பட்டு விஜயின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர். மேலும் இந்த மாநாட்டில் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று தமிழக வெற்றி கழகம் கட்சி தரப்பில் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த மாநாட்டில் ஐம்பதாயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும் என்று போலீசார் நெருக்கடி தந்துள்ளனர். 21 விதமான நிபந்தனைகளை விதித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி மாநாட்டுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த அரசியல் மாநாட்டை மதுரை திருச்சி கோவை போன்ற பெருநகரங்களில் நடத்த விடாமல் தடுத்த ஆளுங்கட்சியினர், கடைசியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மாநாட்டை நடத்த அனுமதித்துள்ளனர். இதனால் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக மாநாட்டுக்கு அதிக அளவில் மக்கள் திரள்வதை தடுக்கும் விதமாக ஆளுங்கட்சி செய்த சூழ்ச்சி தான் இது என்று விஜய் கட்சியினர் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் வருகிற 23ஆம் தேதி நடப்பதாக இருந்த விஜய் அரசியல் மாநாடு அந்த தேதியில் நடக்காது என்று அதிர்ச்சிகரமான தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அந்த நாளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி மாநாடு ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடப்பதால் அந்த நாளில் விஜய் நடத்தும் அரசியல் மாநாட்டுக்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு வேறொரு தேதியில் நடத்திக் கொள்ளுமாறு போலீசார் தரப்பில் அறிவுறுத்தியதாக தெரியவந்துள்ளது.
மேலும் குறுகிய கால அவகாசம் மட்டுமே இருப்பதால் குறைந்த நாட்களில் மாநாடு பணிகளை சிறப்பாக முடிக்க முடியாது என்பதால், இதை ஏற்றுக்கொண்டு வேறொரு தேதியில் மாநாட்டை நடத்திக் கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தலைமை முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதனால் வருகிற 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் விஜயின் முதல் அரசியல் மாநாடு நடக்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரியவந்துள்ளது. இதனால் விஜய் கட்சியினரும், ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர்.





