நடிகர் விஜய் நடிப்பில் இம்மாதம் 5ம் தேதி வெளியான தி கோட் படம் இதுவரை உலகம் முழுவதும் 414 கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிகர்கள் மோகன்லால், பிரகாஷ்ராஜ், நடிகைகள் சிம்ரன், சமந்தா, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை முடித்துவிட்டு நடிகர் விஜய் முழுநேர அரசியல்வாதியாக களத்தில் இறங்கி, வருகிற 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளார். குறிப்பாக திமுக ஆட்சிக் கட்டிலில் இருப்பதால் அவர்களை அகற்றி விட்டு, விஜய் முதல்வராக அமர திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு. வருகிற அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், எதிர்கால திட்டங்கள், விஜய் அரசியலுக்கு வருவதற்கான காரணங்கள் உள்ளிட்டவை குறித்து நடிகர் விஜய் பேசி, பல விஷயங்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.
நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடத்த மதுரையில்தான் முதலில் திட்டமிட்டார். மதுரையில் நடத்த ஆளுங்கட்சி தரப்பில் இடையூறு செய்த நிலையில், அடுத்ததாக திருச்சியில் மாநாட்டை நடத்த முடிவு செய்தார். அங்கும் ஆளுங்கட்சி தரப்பில் குடைச்சல் கொடுத்ததால் அடுத்து சில மாவட்டங்களில் விஜய் மாநாடு நடத்த முயற்சித்தும் அங்கு போதிய இட வசதியும், போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலையில் அங்கு மாநாடு நடத்த முடியவில்லை.
கட்சி தொடங்கி ஏழு மாதங்கள் கடந்தும் மாநாடு நடத்தாததால் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விஜய் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், எப்படியும் செப்டம்பரில் மாநாடு நடத்தியே தர வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 23ம் தேதி மாநாடு என்று தகவல் பரவிய நிலையில், பிறகு அக்டோபர் 15ம் தேதிக்கு மாநாடு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அக்டோபர் 27ம் தேதி மாநாடு என்று நடிகர் விஜய், சில தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
வருகிற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பண்டிகை காலத்தில் 3 நாட்களுக்கு முன் மாநாடு நடத்தினால் மாநாட்டில் கலந்து கொள்ள கட்சியினரும் தொண்டர்களும் விஜயின் ரசிகர்களும் வந்து செல்வதில் பல்வேறு போக்குவரத்து சிரமங்கள் ஏற்படும். பண்டிகை காலத்தில் குடும்பத்தினருக்கு புத்தாடை வாங்குவது, பட்டாசுகள் வாங்குவது, தொழிலாளர்கள் போனஸ் என்ற சூழலில், பலரும் மாநாட்டில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதால் போலீசார் திட்டமிட்டே தீபாவளி பண்டிகை நேரத்தில், விஜய் தனது கட்சி மாநாட்டை நடத்த அனுமதி தந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.





