தமிழ் சினிமா தொடங்கியதில் இருந்து இங்கு எத்தனையோ காதல் திரைப்படங்கள் வந்துவிட்டன. சொல்லப்பட்ட காதல், சொல்லப்படாத காதல், பார்க்காத காதல், புரியாத காதல் என இயக்குனர்கள் அதனை பல விதமாகப் பிரித்து ரசிகர்களுக்கு தன்னால் முடிந்தவரை சுவாரசியமாக கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் ரசிகர்களை மனதில் நீங்காத நினைவை ஏற்படுத்தும் வகையில் காலத்திற்கு சொல்லும் படமாக அமைந்தது 96 திரை காவியம். பிரேம்குமார் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இங்கு பலரும் பள்ளி பருவத்தில் கடந்து வந்த காதலை பற்றி யோசிக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்க, அவர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்து பள்ளி காலத்திற்கு அழைத்துச் சென்றார் பிரேம்குமார். 96 திரைப்படத்தின் சிறப்பம்சமே அதில் காதல் கூறப்பட்ட விதம் தான்.
கோவிந்த் வசந்தாவின் இசையோடு படம் ஒன்றி போக, ஒவ்வொரு காட்சிகளும் காதலை ரசிகர்கள் கனத்த இதயத்துடன் கடந்து போகும் வகையில் படத்தை எடுத்திருந்தார் இயக்குனர் பிரேம்குமார். அதிலும் இதில் நடித்திருந்த விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இருவரும் தனக்கு ஏற்ற ரோலை சரியாக புரிந்து கொண்டு, அதில் முழுவதுமாக ஒன்றிப்போய் இருந்தனர்.
பள்ளி மாணவர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்களும், அதனை சரியாக செய்ததால் 96 திரைப்படம் பலராலும் கொண்டாடப்பட்டது. தற்போது அதன் இயக்குனர் பிரேம்குமார் மெய்யழகன் என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எந்த திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது.
குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் தொடர்பான பேட்டியில் பேசிய பிரேம்குமார் 96 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார். அதேசமயம் இது காதல் படமாக இருக்காது என்றும், குடும்ப உறவுகளை மையப்படுத்தி வித்தியாசமான கோணத்தில் தான் இருக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், என்னது 96 படத்தின் இரண்டாம் பாகத்தில் காதல் இருக்காதா என்று ஏமாற்றத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





