செம்மர கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்டபடம் புஷ்பா. இந்த படம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தமிழ், இந்தி என பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டது. புஷ்பா படத்துக்கு தமிழ், இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பேராதரவு கிடைத்தது. புஷ்பா படத்துக்கு எதிர்பார்த்ததை விட பல நூறு கோடி ரூபாய் கூடுதல் லாபம் கிடைத்தது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியது.
புஷ்பா முதல் பாகமாக வெளிவந்த நிலையில், படத்தின் 2 பாகம் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் குறிப்பிட்ட அந்த நாளில் புஷ்பா 2 படம் வெளியாகவில்லை. காரணம், இன்னும் புஷ்பா படத்தின் பல முக்கிய காட்சிகள் எடுக்கப்பட இருப்பதாலும், படத்தை இன்னும் மிகச் சிறப்பாக ரசிகர்களுக்கு தர வேண்டும் என்ற நோக்கத்திலும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால் வருகிற டிசம்பர் 6ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்தது.
இதற்கிடையே புஷ்பா படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் படத்தின் இயக்குனர் சுகுமாரனுக்கும், ஹீரோ அல்லு அர்ஜுனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு கட்டத்தில் இருவரும் படப்பிடிப்புக்கு சரியாக ஒத்துழைப்புத் தராமல் படப்பிடிப்பு தடைபட்டது.
இதனால் நடிகர் அல்லு அர்ஜுன் வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றதும், அதேபோல் படத்தின் இயக்குனர் சுகுமாரனும் தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. அதனால் புஷ்பா 2 படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டதால், புஷ்பா 2 படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சமீபத்தில் படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், இன்னும் 75 நாட்களில் அதாவது, டிசம்பர் 6ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று குறிப்பிட்டு இருந்தது.
இயக்குனர் சுகுமாரன், நடிகர் அல்லு அர்ஜூன் இடையே நீடித்து வந்த பஞ்சாயத்தை, படத்தின் தயாரிப்பாளர் தலையிட்டு தீர்த்து வைத்துள்ள நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கி வேகமாக நடந்து வருகிறது. வருகிற அக்டோபர் 10ம் தேதி மாலை 6 மணியுடன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. அதனால் டிசம்பர் 6ம் தேதி மிக உறுதியாக புஷ்பா 2 படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற குத்தாட்ட பாடலுக்கு நடிகை சமந்தா அம்சமாக நடனமாடி இருந்தார். அதேபோல் புஷ்பா 2 படத்தில் இடம்பெற்றுள்ள குத்தாட்டத்துக்கும் சமந்தா நடனமாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை குத்தாட்ட பாட்டுக்கு நடனமாடுகிறார். அனிமல் படத்தில் நடித்துள்ள நடிகை திரிப்தி டிம்ரி, புஷ்பா 2 படத்தில் குத்தாட்டம் போட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது





