சினிமாவை பொருத்த வரை நாளுக்கு நாள் அதன் வரையறைகள் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆரம்ப காலத்தில் தெருக்கூத்துகள், வீதி நாடகங்களும் நடத்தப்பட்ட போது இரவு 10 மணியளவில் இந்த கலை நிகழ்ச்சிகளை துவங்கினால், விடிய விடிய நடக்கும். விடிந்த பிறகும் கூட நடக்கும். அப்போது மக்கள் அதை தூக்கம் விழித்து பார்த்து ரசித்தார்கள்.
அதன்பிறகு, டெண்டு கொட்டகைகளில் கருப்பு வெள்ளை திரைப்படங்கள் வெளியான போது நான்கு மணி நேரத்துக்கு மேல் படங்கள் இருந்திருக்கின்றன. ஒரு படத்தில் 20 பாடங்கள், 25 பாடல்கள் எல்லாம் இருந்த காலகட்டம் அது. ஒரு பாடல் காட்சியே 7 முதல் 10 நிமிடம் வரை நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது 1960களின் காலகட்டமாக இருந்திருக்கிறது.
ஆனால் கால சூழ்நிலை மாறிய பிறகு இப்போதெல்லால் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி 20/20 ஆக மாறிவிட்டது. பாஸ்ட் புட் உணவங்களில் சில நிமிடங்களில் உணவு தயாரித்து, சில நிமிடங்களில் சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். எங்கும் எதிலும் வேகம் என்பதே மனிதர்களின் இயல்பாக மாறிவிட்டது. நிதானம் என்பதே வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டது.
அதே போல் சினிமாவிலும் வேகம் என்பது மிகவும் முக்கியமாகி விட்டது. ஒரு படம் வேகமாக சென்றால், அடுத்தடுத்த காட்சிகளில் மனம் லயிக்காமல் ஏதோ சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸில் சென்று வந்ததை போன்ற உணர்வில்தான் ரசிகர்கள்தான் படம் பார்க்க நினைக்கின்றனர். பாலு மகேந்திரா, மகேந்திரன் போல இப்போது படம் எடுத்தால் ஆபரேட்டரே தூங்கி விடும் நிலைமைதான் உள்ளது.
இத்தகைய ஒரு சூழலில், தமிழ் படங்களின் அதிக பட்ச நீளம், அதாவது படம் திரையில் ஓடும் நேரம் 2 மணி நேரம் 5 நிமிடம் முதல், 2 மணி நேரம் 15 நிமிடங்கள் வரைதான். இதில் 10 நிமிடங்கள் முன்னதாக, பின்னதாக இருக்கலாம் என்பது தவறில்லை. ஆனால் இப்போது வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாமே மிக நீளமானதாக, அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக இருக்கின்றன.
குறிப்பாக வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் நீளம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள் என்று சென்சார் போர்டு வெளியிட்ட தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. அதுவும் 5 மணி நேர படத்தை இப்படி 2 மணி நேரம் 47 நிமிடமாக குறைத்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இந்தியன் 2, தி கோட், ராயன், தங்கலான் என பல படங்கள் இப்படிதான் அதிக நேரம் ஓடும் படங்களாக இருக்கின்றன. இரண்டே கால் மணி நேரத்துக்குள் இயக்குனர்களால் படம் எடுக்கவே முடியாதா என்று நொந்து போன ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





