அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தின் மீது எந்த எதிர்பார்ப்பு உள்ளதோ அதற்கு ஒரு படி மேல் குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக இரண்டு விஷயங்களை கூறலாம்.
ஒன்று நடிகர் அஜித்குமாரை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் காட்டி இருக்கும் விதம். படத்தின் முதல் போஸ்டரிலேயே நடு விரலை காண்பித்து நக்கலாக போஸ் கொடுத்தார் அஜித் குமார். ஒரு உச்ச நட்சத்திரத்தை இப்படி முழுக்க முழுக்க ஜாலியான கேரக்டரில் யாரும் காட்டி விட முடியாது என்பதை அந்த ஒரு போஸ்டரே காட்டிக் கொடுத்தது.
அதிலும் அஜித் கலர் கலராக சட்டை அணிந்து இருப்பதும், விதவிதமான கூலிங் கிளாஸ் உடன் உடல் முழுதும் டாட்டூ வரைந்து இருப்பதும் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அணிந்திருந்த கூலிங் கிளாஸ் இன் பிரதிபலிப்பில் பில்லா படத்தின் போஸ்டரும் இருந்தது.
இதனால் ஆதிக் ரவிச்சந்திரன் என்ன கூற வருகிறார் என ரசிகர்கள் அப்போதே கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். ஒருவேளை பில்லா படத்தில் வரும் வேலு கதாபாத்திரத்தின் நீட்சியாகத்தான் இந்த குட் பேட் அக்லி இருக்குமோ என்றும் அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க அஜித்தின் தீவிர விசிறியாக ஆதிக் ரவிச்சந்திரன் இருப்பதால், படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் ஒழிந்து இருக்கும் என்றே கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அண்மையில் பேசிய வெங்கட் பிரபு, அஜித்தின் குட் பேட் அக்லியில் விஜயின் ரெஃபரன்ஸ் இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
ஸ்பெயினில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் சூழலில், இதில் நடிகர் பிரசன்னா இருப்பதாக அண்மையில் தெரிவித்தார். தனது நீண்டகால கனவு நிறைவேறி விட்டதாகவும் கூறினார். இந்த நிலையில் படத்தில் நடிகர் பிரபுவை நடிக்க வைக்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் தான் பிரபுவின் மகளுக்கும், இயக்குனருக்கும் திருமணம் நடைபெற்றது. இப்படியான சூழலில் தனது மாமனாரை படத்தில் நடிக்க வைக்க மருமகன் ஆதிக் விரும்புவதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.





