கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சூர்யாவும் அவரது ரசிகர்களும் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தார்கள். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் ஒரு திரைப்படமாக உருவாகி இருக்கிறது கங்குவா. 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
யூ வி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இந்த படத்தை எடுத்திருக்கிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உட்பட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக கங்குவா உருவாகி இருக்கிறது. இதற்காக படப்பிடிப்பை மட்டும் ஓராண்டுக்கும் மேலாக நடத்தி இருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா.
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருக்கிறார். பாபி தியோல், நட்டி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். வரும் 14ஆம் தேதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.
பான் இந்தியா திரைப்படம் என்பதால் வெளிமாநிலங்களில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக அதி தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. மும்பை டெல்லி ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அவர் பயணித்து கங்குவா திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஃபேண்டஸி கலந்த படமாக உருவாகி இருக்கும் கங்குவாவில், இரண்டு சூர்யா கதாபாத்திரங்கள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். இதில் ஒரு சூர்யாவின் கதாபாத்திரம் பெயர் பிரான்சிஸ். நிகழ்காலத்தில் நடக்கும் கதையில் பிரான்சிஸ் கதாபாத்திரம் இடம் பெற்று இருக்குமாம்.
அதேபோல் 1500 ஆண்டுகளுக்குப் பிந்தைய கதாபாத்திரத்தில் கங்குவா சூர்யா வருகிறாராம். முதலில் வெறும் 20 நிமிடங்கள் மட்டும் தான் இந்த போர்ஷன்கள் இருக்கும் என்று கூறியிருந்தார்கள். பிறகு, அதற்கான காட்சியை சிறுத்தை சிவா நீட்டித்து இருக்கிறார். அதேபோல் படத்தில் சூர்யா சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். இதற்கு முன்பாக ஏழாம் அறிவு படத்தில் தான் அவர் இதனை செய்திருந்தார். தனது 49 வது வயதிலும் சூர்யா துடிப்புடன் இவ்வாறு செயல்பட்டு வருவது அவரது ரசிகர்களுக்கு உத்வேகத்தை அளித்திருக்கிறது.





