தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் மிகச் சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் சிறப்பாக, அழுத்தமாக தங்களது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அவர்களுக்கு அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு என்பது கிடைக்காமல் போய்விடுகிறது. அதிலும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையில் உள்ள சின்ன நடிகர்கள். பெரிய அளவில் முன்னணி நடிகர்கள் போல் கொண்டாடப்படுவதில்லை.
ஆனால் நடிப்பில் அவர்கள் முன்னணி நடிகர்களை காட்டிலும் சிறந்த நடிப்பாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு அற்புதமான நல்ல நடிகர்களில் ஒருவர்தான் அட்டகத்தி தினேஷ். பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர்.
தொடர்ந்து விசாரணை, அண்ணனுக்கு ஜே, குக்கூ, திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து, தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் போன்ற சில படங்களில் தினேஷ் நடித்திருக்கிறார். இந்த படங்களில் குறிப்பாக விசாரணை, குக்கூ போன்ற படங்களில் தினேஷ் நடிப்பு வேற லெவலில் இருக்கும். அதிலும் குக்கூ படத்தில் கண்பார்வையற்றவராக தினேஷ் நடிப்பு அசத்தலாக இருந்தது.
சமீபத்தில் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடன் அட்டக்கத்தி தினேஷ் இணைந்து நடித்திருந்தார். இதில் ஹரிஷ் கல்யாணின் மாமனார் கேரக்டரில் தினேஷ் நடித்திருந்தார். தினேஷின் மகளை தான் ஹரீஷ் கல்யாண் காதலிப்பது போல் படத்தின் கதை இருக்கும்.
தமிழ் சினிமா வரலாற்றில் லப்பர் பந்து படம் குறிப்பிடும் படியான மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது, லப்பர் பந்து படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட படமாக இருந்தாலும் இது பல விதங்களில் ரசிகர்களை கவர்ந்த ஒரு அழுத்தமான படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை அட்டகத்தி தினேஷ் என்று அழைக்கப்பட்ட நடிகர் தினேஷ், இப்போது கெத்து தினேஷ் என அழைக்கப்படுகிறார். ஏனெனில் லப்பர் பந்து படத்தில் கெத்து தினேஷ் கேரக்டரில் கிரிக்கெட் வீரராக அவர் அசத்தியிருப்பார். இந்த படத்தில் விஜயகாந்த் ரசிகராக தினேஷ் மாஸ் காட்டியிருந்தார்.
சமீபத்தில் கெத்து தினேஷ் அளித்த நேர்காணல் ஒன்றில், எனக்கு சினிமா துறையில் பா ரஞ்சித் வெற்றிமாறன் இருவரும் அண்ணன்கள் மாதிரி உள்ளனர். எந்த ஒரு விஷயம் என்றாலும் அவர்களைத்தான் நான் தேடி போவேன். அவர்கள் எனக்கு குரு மாதிரி பார்க்கிறேன். இப்போது அந்த இடத்திற்கு தமிழரசன் பச்சமுத்துவும் வந்திருக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





