இந்திய திரை உலகில் மிக முக்கியமான நடிகை சரோஜாதேவி. பழம்பெரும் காவியங்களில், சரோஜாதேவியின் நடிப்பு என்பது முக்கிய பங்களித்து இருக்கிறது. சரோஜா தேவியின் உண்மையான பெயர் ராதா தேவி. 1938 ஆம் ஆண்டு பிறந்த அவர், இளம் வயதிலேயே நடனத்தின் மிகத் தீவிர கவனம் செலுத்தி வந்தார். அங்கிருந்து திரை உலகிற்கும் பயணித்தார்.
அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என போற்றப்படும் சரோஜாதேவி, தமிழ் தெலுங்கு கன்னடம் என பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சொல்லப்போனால் 1960 முதல் 70 காலகட்டங்களில், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்தார் சரோஜாதேவி.
அப்போது மூத்த நடிகராக இருந்த எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் சரோஜாதேவி நடித்திருக்கிறார். இதில் மிக முக்கியமாக அன்பே வா திரைப்படத்தை கூறலாம். அதில் சரோஜாதேவி எம்ஜிஆர் உடன் இணைந்து ராஜாவின் பார்வையில் ராணியின் பக்கம் நாடிய பாடலை தமிழ் சினிமா இப்போது மறக்காது.
இதேபோல் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடி மன்னன் திரைப்படமும் அவருக்கு பெயரையும் புகழையும் தேடித் தந்தது. அந்த காலகட்டத்தில் சரோஜாதேவி சாவித்திரி மற்றும் பத்மினி ஆகிய மூன்று நடிகைகளும் உச்சத்தில் இருந்தனர். 1965 ஆம் ஆண்டுக்குப் பிறகு கே ஆர் விஜயா மற்றும் ஜெயலலிதா ஆகியோர் திரைத்துறைக்கு வர இவர்களின் வாய்ப்பு குறைந்து போனது.
இருப்பினும் சரோஜாதேவிக்கு என தனி ரசிகர் பட்டாளம் அப்போதிலிருந்து இப்போது வரை இருந்து வருகிறது. அவர் எம்ஜிஆர் உடன் இணைந்து 26 திரைப்படங்களிலும், சிவாஜியுடன் கைகோர்த்து 22 திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் சரோஜாதேவி. 87 வயதான அவர், உடல் நலக்குறைவால் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்திய சினிமாவுக்கு பரிச்சயமான சரோஜாதேவி 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் அங்கம் வகித்துள்ளார். பத்மஸ்ரீ பத்மபூஷன் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார். 2008 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது. இப்படி திரைத்துறையால் போற்றப்பட்ட சரோஜாதேவியின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.





