தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் ஹிப் ஆப் ஆதி. பல வெற்றி படங்களுக்கு இசையமைத்தவர். பல இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். வணக்கம் சென்னை, ஆம்பள, அரண்மனை 2, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஹிப் ஆப் தமிழா ஆதி. இந்த படங்களில் ஒரு பாடல் காட்சியிலும் ஹிப் ஆப் தமிழா ஆதி தோன்றி ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
தொடர்ந்து மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு, வீரன், பிடி சார் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாகவும் நடித்திருந்தார். இன்றைய டீன் ஏஜ் வயதினருக்கு ஆதி இசையை போலவே, அவரது நடிப்பும் வெகுவாக பிடித்திருந்ததால் இதில் சில படங்கள் நஷ்டம் இல்லாத படங்களாக தயாரிப்பாளர்களுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹிப் ஆப் ஆதி கடைசியாக நடித்து வெளிவந்த படம் கடைசி உலகப் போர். இந்த படத்தை அவரே தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை ்தொடர்ந்து மற்றொரு படத்தையும் தயாரிக்க அவர் தயாராக இருந்தார். ஆனால் கடைசி உலகப் போர் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றால் மட்டுமே, அடுத்த படத்தை தயாரிக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.
ஏனெனில் இதுவரை அவர் இசையமைத்து சம்பாதித்த பணம், இசை கச்சேரிகள் நடத்தி சம்பாதித்த பணம் என மொத்த பணத்தையும் முதலீடு செய்து கடைசி உலகப் போர் படத்தை ஹிப் ஆப் ஆதி தயாரித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் ஏமாற்றம் அளித்தது. பெரிய அளவில் ஆதிக்கு நஷ்டத்தை தந்துள்ளது.
இதையடுத்து தனது அடுத்த படம் தயாரிப்பு பணியை அப்படியே கிடப்பில் போட்ட ஹிப் ஆப் ஆதி, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்புகளை தேடி வருகிறார். ஏனெனில் இதுவரை சம்பாதித்த பல கோடிகளை கடைசி உலகப் போர் படத்தில் முதலீடு செய்து, பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்திருக்கிறார் ஆதி. அதனால் இன்னும் சில ஆண்டுகளுக்கு படம் தயாரிப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
கடைசி உலகப் போர் வெளியான ஒரு வாரத்தில், படம் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து படத்தில் பணிபுரிந்த அனைவரையும் நேரில் அழைத்து அவர்களுக்கு தரவேண்டிய தொகை முழுவதையும் செட்டில்மென்ட் செய்த ஆதி, நான் அடுத்த படம் தயாரிக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும். அதுவரை நீங்கள் வேறு படங்களில் பணிசெய்யுங்கள். மீண்டும் நான் படம் தயாரித்தால், நீங்கள் தேவைப்படும் போது நானே அழைக்கிறேன் என்றும் கூறி அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.





