- Advertisement -
Homeபொழுதுபோக்குஉண்மை மறைந்தாலும் அழியாது, ஒரு நாள் வெல்லும் - பாலியல் புகாரில் சிறைக்கு சென்று திரும்பிய...

உண்மை மறைந்தாலும் அழியாது, ஒரு நாள் வெல்லும் – பாலியல் புகாரில் சிறைக்கு சென்று திரும்பிய ஜானி மாஸ்டர் பதிவு வைரல்!

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடன இயக்குனர் ஜானி மாஸ்டர். தமிழில் அரபிக் குத்து, காவலய்யா, மேகம் கருக்குதா பெண்ணே பெண்ணே, ரஞ்சிதமே உள்ளிட்ட பல பாடல்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தவர். தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே என்ற பாடலுக்காக ஜானிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு, பின்பு அந்த விருது ரத்து செய்யப்பட்டது.

நடன கலைஞர் இளம்பெண் ஒருவர் ஜானி மாஸ்டர் மீது ஐதராபாத் போலீசில் பாலியல் புகார் அளித்தார். அதையடுத்து ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், காயப்படுத்துதல் என 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் மைனர் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக அவர் மீது போக்சோ சட்டமும் பாய்ந்தது.

- Advertisement -

இதையடுத்து ஜானி மாஸ்டரை தனது ஜனசேனா கட்சியில் இருந்து நடிகர் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நீக்கினார். தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்திலிருந்தும் ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோவாவில் தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புகார் அளித்த பெண், மைனராக இருக்கும்போதே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் ஒப்பு கொண்டதாக தகவல் வெளியானது.

ஆனால் அதெல்லாம் பொய்; திட்டமிட்ட சதி என்றும் ஜானி மறுத்ததாகவும் தகவல் வெளியானது. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் மன உளைச்சலை தந்ததாகவும், சினிமாவில் அவப்பெயர் உண்டாக்குவேன் என்று மிரட்டியதாகவும் ஜானி மாஸ்டர் வாக்குமூலம் அளித்தார். மேலும் இதுகுறித்து ஜானி மாஸ்டர், புஷ்பா பட இயக்குனர் சுகுமாரிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியானது.

- Advertisement -

சிறையில் இருந்த ஜானி மாஸ்டர், ஜாமீன் கேட்டு அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 30 நாட்களுக்கு மேலாக அவர் சிறையில் இருந்தார். இந்நிலையில் ரங்கா ரெட்டி நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் ஜாமினில் வெளியே வரும் ஜானி மாஸ்டர், புகார் அளித்த பெண்ணுக்கு எந்த தொந்தரவும் அழுத்தத்தையும் தரக்கூடாது என்றும் நீதிமன்றம் நிபந்தனை கூறி எச்சரித்துள்ளது.

சிறையில் இருந்து வெளியே வந்த ஜானி மாஸ்டர், தன் வீட்டுக்கு சென்று தன் பிள்ளைகளை முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், இந்த 37 நாட்களில் எங்களிடமிருந்து நிறைய பறிக்கப்பட்டது. என் குடும்பத்தினர் மற்றும் நலன் விரும்பிகளின் பிரார்த்தனையால் நான் இன்று இங்கிருக்கிறேன். உண்மை பல நேரங்களில் மறைந்தாலும் அழியாது, ஒரு நாள் வெல்லும். என் குடும்பத்தினர் கடந்து வந்த இந்த காலகட்டம் என்றென்றும் என் இதயத்தை துளைக்கும் என்று ஜானி மாஸ்டர் பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்