இந்திய சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படம் பாகுபலி. இந்த படத்தின் முதல் பாகத்தில் மனோகரி என்ற ஐட்டம் பாடலுக்கு பச்சை நிற ஆடையில் நடனமாடி ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்தான் நடிகை நோரா பதேஹி. சல்மான்கான், வருண் தவான் போன்ற பாலிவுட் நட்சத்திர ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தவர். பல குத்தாட்ட பாடல்களுக்கு நடனமாடியவர்.
கனடாவை சேர்ந்த நோரா பதேஹி இந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல படங்களில் நடித்துள்ளார். நாகர்ஜூனா கார்த்தி நடித்த தோழா படத்திலும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். இப்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் காஞ்சனா 4 படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர உள்ள ஜெயிலர் 2 படத்திலும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நோரா பதேஹி நடனம் ஆடியிருப்பதாக கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகை நோரா பதேஹி மும்பையில் 2 தினங்களுக்கு முன்பு மதியம் ஒரு கார் விபத்தில் சிக்கினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள லிங்க் ரூட்டில் நோரா பதேஹி தனது காரில் சன்பர்ன் இசை நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த ஒரு போதை ஆசாமி ஒருவர், நோரா பதேஹி கார் மீது தனது காரை பயங்கரமாக மோதியிருக்கிறார். இந்த மோதலின் வேகத்தில் காருக்குள் இருந்த நேரா பதேஹி காரின் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது தலை காரின் ஜன்னலில் பலமாக மோதியது.
இந்த விபத்தில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்ட நோரா பதேஹி மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை நோரா பதேஹி வெளியிட்டு உருக்கமாக பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, என் கண் முன்னே என் வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைத்தேன். இது மிகவும் பயங்கரமான அனுபவம். 2025 ம் ஆண்டிலும் மது அருந்திவிட்டு வாகன ஓட்டுவது குறித்த குறித்து நாம் பேசிக் கொண்டிருப்பது வருத்தமாக இருக்கிறது. தயவு செய்து குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்று அதில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விபத்தை ஏற்படுத்திய வினய் சக்பால் என்ற 27 வயது இளைஞரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.





