தமிழ் சினிமாவில் எப்போதுமே படங்களுக்கு கிடைக்கிற அதே வரவேற்பும் ஆதரவும் படங்களில் இடம்பெறும் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது. பல படங்கள் பாடல்களுக்காகவே ஹிட்டாகி ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஒரு படத்தில் பாடல்கள் என்பது அந்த படத்துக்கு மிகப்பெரிய பக்கபலமாகவும், வெற்றிக்கு உறுதுணையாகவும் இருந்து வருகிறது.
அதனால்தான் எம்ஜிஆர் சிவாஜி போன்றவர்கள் தங்களுடைய படங்களில் இடம்பெறும் பாடல்கள் குறித்து மிகுந்த கவனம் செலுத்தினார்கள். அதிலும் எம்ஜிஆர் தனது பாடல்களுக்காக அதிக அளவில் மெனக்கெடுவார். பாடல்களின் வரிகள் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக கவிஞர்கள் கொடுக்கும் பாடல்களை பலமுறை பார்த்து, திருத்தங்கள் செய்த பின்னர் தான் அவர் ஒத்துக் கொள்வார்.
எம்ஜிஆர் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் பாடலை ஓகே செய்தாலும் எம்ஜிஆர் பாடல்களுக்கு தலையசைத்தால் மட்டுமே அந்த பாடல் ரெக்கார்டிங் தியேட்டரில் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரஜினிகாந்த், கமல்ஹாசன் விஜயகாந்த் ராமராஜன் போன்றவர்களுக்கு அவர்களின் மிகப்பெரிய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது அவர்களது படங்கள் மட்டுமின்றி, அந்த படங்களில் இடம்பெற்ற பாடல்களும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் இப்போதும் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த பல பாடல்களை ரசிகர்கள் வரவேற்றுக் கொண்டாடுகின்றனர். அந்த பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் வரவேற்பும் தந்து வருகின்றனர். சமீபத்தில் கூட லப்பர் பந்து படத்தில் நீ பொட்டு வெச்ச தங்க குடம் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாக வரவேற்பை பெற்றது. அந்த படமும் வெற்றி வாகை சூடியது.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பாடல் ரீமிக்ஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பழைய படங்களில் இடம்பெற்ற ஹிட் பாடல்களை ரீமிக்ஸ் செய்து புதிய படங்களில் இடம்பெறச் செய்கின்றனர். இதுபோல் இசைப் புயல் ஏ ஆர் ரகுமான் பாடல்களும் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளன. பாடல்களை ரீமிக்ஸ் செய்ய ஒரு தரப்பில் ஆதரவும், ஒரு தரப்பில் எதிர்ப்பும் இருந்து வருகிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பாடல் ரீமிக்ஸ் கலாச்சாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 6 வருடங்களுக்கு முன்பு வந்த பழைய பாடல்களை இப்போது காப்பியடித்து ரீமிக்ஸ் செய்கிறார்கள். அதை பெருமையாகவும் பேசுகிறார்கள். அப்படி பழைய பாடல்கள் ரீமிக்ஸ் செய்வது மிகவும் தவறு. ஒரிஜினல் பாடலை உருவாக்கியவர்களின் அனுமதி பெறாமல் பாடலை ரீமிக்ஸ் செய்வது சரியல்ல. தற்போது இசையில் ஏஐ தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வரும் நாட்களில் இது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். இதனால் நிறைய பேர் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்படலாம் என்று ஏஆர் ரகுமான் தெரிவித்திருக்கிறார்.





