நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான அமரன் படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் மேஜர் முகுந்த் ஆக நடித்த சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமரன் படத்தின் சக்சஸ் மீட்டில் பங்கேற்ற படத்தின் நாயகன் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, வெளிநாட்டில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன் சென்னைக்கு வந்ததும் அவரை சந்திப்பதற்கு நான் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றேன். ஏனென்றால் எங்களை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் தயாரித்த அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை நான் அண்ணா என்று அழைப்பேன். அவர் என்னை தம்பி என்று அழைப்பார். எங்களுக்குள் இருந்த ரிலேஷன்ஷிப் இப்போதும் இன்னும் நெருக்கமாகி விட்டது. இந்த படத்துக்காக இயக்குனர் மிகவும் பாடுபட்டார் என்பது மிகப்பெரிய உண்மை.
அமரன் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஓட்டலுக்கு சென்றாலும் கூட இரவெல்லாம் அவர் தூங்கவே மாட்டார். நாளை சூட்டிங்கில் என்ன செய்ய வேண்டும் என்று தான் யோசித்துக்கொண்டே இருப்பார். அந்த அளவுக்கு அவர் தீவிரமாக வேலை செய்தார். இந்த படத்துக்கு கிடைத்துவரும் அனைத்து பெருமைகளும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கே சேரும். எனக்கு இந்த படம் பண்ண கிடைத்த வாய்ப்பே மிகப்பெரியதாக நினைக்கிறேன்.
அமரன் படத்தை பார்த்த தலைவர் ரஜினிகாந்த் எங்களை நேரில் அழைத்து பாராட்டினார். தலைவர் ரஜினி சாரை நான் நேரில் பார்த்தபோது, படத்தில் எங்கேயுமே சிவகார்த்திகேயன் தெரியவில்லை. அந்த அளவுக்கு பெர்பார்ம் பண்ணி இருந்தீர்கள். மாவீரன் டாக்டர் அயலான் அமரன் என மாறுபட்ட படங்களில் நடிக்கிறீங்க, நீங்க எப்படி இப்படி யோசிக்கிறீங்கன்னு எனக்கு தெரியல என்று ரஜினி சார் சொன்னார். எனக்கு சிலிர்த்துவிட்டது.
குடும்பம் குழந்தைகளுடன் அனைவரும் பார்க்கக் கூடிய ஒரு சிறந்த படமாக அமரன் படம் அமைந்துவிட்டது அதற்கு முக்கிய காரணம் அந்த கேரக்டரில் நடித்த சாய் பல்லவிதான். இந்த படத்தில் எங்களுக்கு இடையே நெருக்கமான எந்த காட்சிகளும் கிடையாது. பல மாறுபட்ட கேரக்டர்களில் நடித்துள்ள சாய் பல்லவிக்கு இந்த படம் தமிழில் இன்னும் ஒரு முக்கியமான படம். இதற்குப் பிறகு சாய்பல்லவிக்கு இன்னும் பெரிய அளவில் கேரக்டர்கள் கிடைக்கும். இந்த படத்தில் நடித்த அவருக்கு விருதுகளும் கிடைக்கும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.





