மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த படம் தக்லைப். இந்த படத்தின் சிம்பு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் திரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாயகன் படத்துக்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து மணிரத்னம், கமல் தக்லைப் படத்தின் மூலம் இணைந்திருக்கின்றனர்.
நேற்று நடிகர் கமல்ஹாசனின் 70வது பிறந்தநாளையொட்டி, தக்லைப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் தக்லைப் படத்தின் ரிலீஸ் தேதி வருகிற 2025ம் ஆண்டில் ஜூன் மாதம் 5ம் தேதி என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய இன்னும் 7 மாதங்கள் கழித்து தக்லைப் படம் வெளியாக உள்ளது.
இது கமல் ரசிகர்களை காட்டிலும், சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை, ஏமாற்றத்தை தந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டில் வெளியான பத்து தல படத்துக்கு பிறகு சிம்பு நடித்த படமே எதுவும் வெளியாகவில்லை. இந்த சூழலில் இன்னும் 7 மாதங்கள் கழி்தது என்பது பெரிய ஏமாற்றமாக மாறியுள்ளது.
ஆனால் உண்மையில், வருகிற ஏப்ரல் 10ம் தேதிதான் தக்லைப் படத்தை வெளியிட துவக்கத்தில் திட்டமிட்டுள்ளனர். ஆனால் மற்ற சில முன்னணி நடிகர்களின் படங்கள் வருகிற ஏப்ரல் மாதத்தில் வர உள்ளதால் அந்த நேரத்தில் ஏற்படும் தியேட்டர் பற்றாக்குறை, வசூல் பாதிப்பை தவிர்க்கவே ஜூன் 5ம் தேதியை தேர்வு செய்துள்ளனர்.
மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி வெளியாகி சக்கைப் போடு போட்டதால் அந்த சென்டிமென்ட் அடிப்படையில் ஜூன் 5ம் தேதியை, மணிரத்னமும் கமலும் சேர்ந்து தேர்வு செய்ததாகவும் ஒரு தகவல் இருந்து வருகிறது.
இந்நிலையில், தனக்கு கிடைத்த ஒரு சூப்பர் வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொண்ட நடிகர் தனுஷ், ஏப்ரல் 10ம் தேதி தனது இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். ராயன் படத்தை அடுத்து தனுஷ் நடித்து இயக்கும் படம் இட்லிக்கடை என்பதால், இன்னும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.





