நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யா, படிப்படியாக படங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர். துவக்கத்தில் சூர்யா நடித்த போது பல கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். ஸ்கூல் பையன் மாதிரி இருக்கிறார் என்றும் சிலர் கூறினர். கேமரா முன்பு எப்படி நிற்பது, நடிப்பது, வசனம் பேசுவது என்று கூட தெரியவில்லை என்று பலரும் கிண்டலடித்தனர். அந்த தடுமாற்றம் சூர்யாவிடம் இருந்ததும் உண்மைதான்.
ஆனால் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி தரும் விதமாக நந்தா, அயன், காக்க காக்க போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சூர்யா அசத்தினார். இயக்குனர்கள் அமீர், பாலா, கௌதம் மேனன், ஏஆர் முருகதாஸ் போன்றவர்கள் சூர்யாவை வேற லெவல் ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு உருவாக்கி தந்தனர் என்றால் அது மிகையல்ல.
இந்த சூழலில் பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, பேரழகன், மாயாவி, உயிரிலே கலந்தது, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் ஜோதிகா, சூர்யா இணைந்து நடித்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சில ஆண்டுகளாக மும்பையில் செட்டிலாகி வசித்து வருகின்றனர்.
இப்போது நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா படம் வருகிற 14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. மொத்தம் 11,500 தியேட்டர்களில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்துக்கு இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
கங்குவா படம் பிரமோசன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர். இதில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா கூறியதாவது, நான் நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படம்தான் ஜோதிகாவின் முதல் தமிழ் படம். இந்தியில் டோலி சாஜா கே ரக்னா படத்துக்கு பிறகு அவரது 2வது படமாக பூவெல்லாம் கேட்டுப்பார் படம் அமைந்தது.
எனக்கு தமிழ் நன்றாக தெரியும். இருந்தும் வசனங்களை மறந்து தடுமாறிக் கொண்டிருந்தேன் .இதனால் என்னுடைய 3வது அல்லது 4வது படத்தில் எனக்கு நடிக்க தெரியவில்லை என்பது போன்ற விமர்சனங்கள் வந்தன. ஆனால் என்னை விட ஜோதிகா நன்றாக வசனங்களை பேசினார். அதனால் அவர் வெற்றியை நோக்கி நகர்ந்தார். காக்க காக்க படத்தில் நடித்த போது ஜோதிகாவின் சம்பளம் என்னை விட 3 மடங்கு அதிகமாக இருந்தது. நான் நிலையான ஒரு இடத்தைப் பிடிக்க 5 வருடங்கள் ஆனது, என்று சூர்யா கூறியிருக்கிறார்.





