விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் வந்ததோடு சரி அதன் பிறகு சூர்யாவை வெள்ளித்திரையில் பார்க்கவே முடியவில்லை. ரோலக்ஸ் கதாபாத்திரம் அவருக்கு மிகப் பெரிய புகழை சேர்த்திருந்த நிலையில் அதன் பிறகு ஒரு பிரம்மாண்ட படத்தில்தான் நடிக்க வேண்டும் என சூர்யா கருதிவிட்டார் என்று தான் தோன்றுகிறது.
இதன் காரணமாகவே சிறுத்தை சிவாவுடன் இணைந்து இரண்டு ஆண்டுகள் செலவழித்து, கங்குவா என்னும் திரைப்படத்தை அவர் கொடுத்திருக்கிறார். சூர்யா நடித்த திரைப்படங்களிலேயே மிக அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் இதுதான். கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பணத்தை இதற்காக கொட்டி இருக்கிறார்கள்.
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், யூ வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்தது. இதன் போஸ்டர் வெளியாகும் போது படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்தது.
இப்படியான சூழலில் தான் கங்குவா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று கேட்டால் அதற்கு சரியான பதில் தான் இன்னும் கிடைக்கவில்லை. சிறுவனை மையப்படுத்தி இதன் காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதில் எமோஷன் கனெக்ட் ஆகவில்லை என்று பலர் கூறுகிறார்கள்.
இரண்டு காலகட்டங்களில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்க, பிரான்சிஸ் கதாபாத்திரம் வரும் இடங்களில் திரைக்கதை சற்று தொய்வாக உள்ளது என பலரும் கூறி வருகிறார்கள். முக்கியமாக திரைக்கதை இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. படம் ஆரம்பமானதிலிருந்து ஒரே சத்தமாக இருப்பதாகவும் சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் ஒட்டுமொத்தமாக படத்தை சூர்யா ஒருவரை தாங்கி பிடித்து இருக்கிறார் என்று பலரும் அவரைப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக முதலை சண்டை காட்சி, கப்பல் சண்டை காட்சி நன்றாக வந்திருப்பதாகவும், பாகம் இரண்டுக்கான லீட் அவுட் நன்றாக உள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. விஷ்வல் ட்ரீடாக இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. இருப்பினும் தயாரிப்பாளர் கூறியது போல் இது ஆயிரம் கோடி ரூபாய் வசூல் எட்டுமா என்பது கேள்விக்குறிதான்.





