தமிழ் சினிமாவில் இன்று டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அமரன் படம் தந்த அமோக வெற்றி அவரை உச்சத்தில் உட்கார வைத்துள்ளது. இந்த படத்துக்கு பின் தனது சம்பளத்தை சிவகார்த்திகேயன் ரூ. 55 கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை போல, விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான போதே, பார்வையாளர்கள் மத்தியில் இந்த பையன் நிச்சயமாக பெரிய இடத்துக்கு ஒருநாள் வருவார் என்று சொல்லும் அளவுக்கு தனது பேச்சில் திறமையை வெளிப்படுத்தியவர்தான் சிவகார்த்திகேயன்.
மெரினா படத்தில் அறிமுகமான அவர் தொடர்ந்து மனம்கொத்தி பறவை, எதிர்நீச்சல், காக்கி சட்டை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களால் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். நம்ம வீட்டுப்பிள்ளை, வேலைக்காரன், டாக்டர், மாவீரன் போன்ற படங்கள் அவரை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.
இப்போது அமரன் படம், சிவகார்த்திகேயனின் சினிமா பாதையில் பெரிய திருப்பத்தை தந்துள்ளது. இதையடுத்து ஏஆர் முருகதாஸ், சுதா கொங்கரா, எச் வினோத் என சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதால், அவரது வளர்ச்சி இனி அபாரமாக செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகையில், எனக்கு ஐபிஸ் படித்து போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதுதான் ஆரம்பத்தில் குறிக்கோளாக இருந்தது. நான் இன்ஜினியரிங் படித்தேன். படித்து முடித்துவிட்டு கோச்சிங் கிளாஸில் சேர்ந்து படித்து ஐபிஎஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற முடிவில்தான் இருந்தேன்.
ஆனால் என் அப்பா ஏற்கனவே போலீஸ் அதிகாரியாக இருந்து மறைந்தவர். அதனால் என் அம்மா, நாட்டுக்காக ஒருவரை நான் கொடுத்துவிட்டேன். அதனால் நீ இன்ஜினியரிங் படித்துவிட்டு ஏதாவது வேலைக்கு போ, போலீஸ் துறை வேண்டாம் என்று கூறிவிட்டார். குடும்பத்தை விட்டுவிட்டு வேறு ஒரு இடத்தில் இருப்பதே டப் ஆக எனக்கும் தோன்றியது. அதனால் ஐபிஎஸ் அதிகாரியாகும் குறிக்கோளை மறந்துவிட்டேன், என்று கூறியிருக்கிறார்.





