கலைக்கு இனம், மொழி, நாடு பேதமில்லை. நல்ல படைப்பு எதுவாக இருந்தாலும் அதை ரசிகர்கள் கொண்டாடி ஏற்றுக்கொள்கின்றனர். அப்படி பல படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆடுஜீவிதம், லக்கி பாஸ்கர், காந்தாரா, புஷ்பா, பாகுபலி என பல படங்களை சொல்லலாம்.
கடந்த 2022ம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த இந்த படம் கன்னட ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தி என பிறமொழிகளிலும் அந்த படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. அந்த மொழிகளிலும் அந்த படத்தை ரசிகர்கள் வரவேற்று கொண்டாடினர்.
இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ரூ. 6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறும் இந்த படம் ரூ. 450 கோடிக்கு மேல் வசூலில் சாதனை புரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து ரிஷப் ஷெட்டி காந்தாரா சாப்டர் 1 என்ற பெயரில், காந்தாரா படத்துக்கு முந்தைய கதையை இப்போது படமாக உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த பல மாதங்களாக பெங்களூரு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல பகுதிகளில் வேகமாக நடந்து வருகிறது. இதிலும் நாயகனாக ரிஷப் ஷெட்டியே நடித்து இயக்குகிறார்.
காந்தாரா சாப்டர் 1 படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த 800ம் ஆண்டுகளில் நடப்பது போன்ற ஒரு கதையாக இது உருவாகி வருகிறது. அதனால் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வெளியான காந்தாரா படத்துக்கு முந்தைய கதையாக இந்த படம் பின்னோக்கிச் செல்கிறது. இந்த படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்போது காந்தாரா சாப்டர் 1 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தரப்பில் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 2025ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று காந்தாரா சாப்டர் 1 படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம், வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் திரைக்கு வருகிறது.





