தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1975ம் ஆண்டில், இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவருக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படம் பெரிய வரவேற்பை, பெயரை பெற்றுத் தந்தது.
தொடர்ந்து சில படங்களில் துணை கதாபாத்திரங்களில், வில்லன் கேரக்டர்களில் நடித்த ரஜினிகாந்த், கலைஞானம் தயாரித்த பைரவி படம் மூலம் நாயகனாக நடித்தார். பிறகு அவர் நடித்த படங்கள் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற முன்னணி நடிகராக மாறினார். ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து நடித்தும், தனித்தனியாக நடித்தும் பெரிய நடிகர்களாக தமிழ் சினிமாவில் முன்னேறினர்.
இந்நிலையில் இயக்குனர் எஸ்பி முத்துராமன் இயக்கிய கழுகு என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். அவருக்கு ஜோடியாக ரதி நடித்தார். ஒய்ஜி மகேந்திரா, சங்கிலி முருகன், விகே ராமசாமி, சுமலதா, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் ரேஸ் வித் தி டெவில் என்ற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். கழுகு படத்தை பஞ்சு அருணாசலம் தயாரித்திருந்தார்.
இந்த படத்தின் கதைப்படி, புதிதாக திருமணமான நாயகன், நாயகி ஒரு உல்லாச பஸ்சில் நண்பர்களுடன் சுற்றுலா செல்வார்கள். அந்த பஸ்சுக்குள் குளியலறை, படுக்கை அறை, ஹால், கிச்சன் என ஒரு வீடு போல எல்லா வசதிகளும் இருக்கும். இந்த பஸ்சில் தன் புது மனைவி, நண்பர்களுடன் செல்லும் ஹீரோ பல பிரச்னைகளை சந்தித்து முறியடிப்பார். அத்தனை பிரச்னைகளுக்கு காரணமாக போலி சாமியாரையும் இறுதியில் போலீசில் பிடித்து கொடுப்பதுதான் கதை. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
கழுகு படத்துக்காக சகல வசதிகளுடன் வாங்கிய அந்த பஸ்சை, படப்பிடிப்பு நிறைவடைந்த பின், அதை படத்தின் நாயகன் ரஜினிக்கு பரிசாக தந்துவிட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் முடிவு செய்தார். வெளியூர்களுக்கு ஷூட்டிங் சென்றால், ரஜினிகாந்த் இந்த பஸ்சை கேரவன் போல பயன்படுத்திக் கொள்ளட்டும் என்றும் அவர் ரஜினி மீது கொண்ட அன்பால் அந்த பஸ்சை பரிசாக அளிக்க முன்வந்தார்.
ஆனால் அந்த பஸ்சை வாங்க மறுத்த ரஜினிகாந்த், அந்த பஸ்சை எரித்து விடுங்கள் என்று தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார். கழுகு படத்தில் கடைசி காட்சியில் அந்த பஸ்சை எரித்து விடுவது போலவும், அப்போது எரியும் பஸ்சுக்கு முன்பு ரஜினி வில்லன் அடியாட்களுடன் சண்டையிடுவது போலவும்தான் காட்சி எடுக்கப்பட இருந்தது. அதனால் காட்சி தத்ரூபமாக தெரிய வேண்டும் என்றால் பஸ்சை உண்மையாக எரிய விட்டால்தான் நன்றாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். அதனால் பஸ்சில் இருந்த முக்கிய பாகங்களை அகற்றிவிட்டு, பஸ்சை உண்மையில் எரிய விட்டு கழுகு பட கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. படத்துக்காக, தனக்கு பரிசளித்த பஸ்சையே ரஜினி மறுத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.





