ஜெயம் ரவிக்கு என்ன தான் ஆனது என்று தெரியவில்லை அவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் அடுத்தடுத்து படுதோல்வியை சந்தித்து வருகின்றன. 2015 ஆம் ஆண்டு தனி ஒருவன் என்னும் மாபெரும் வெற்றியை கொடுத்தார் ஜெயம் ரவி.
பிறகு மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட சுமாரான வெற்றி திரைப்படங்களை கொடுத்த அவருக்கு, அடுத்த பிரம்மாண்ட வெற்றியை கொடுக்க நான்கு ஆண்டுகள் ஆனது. 2019 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவர் நடித்த கோமாளி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
90ஸ் கிட்ஸ்களின் வாழ்வியலை அந்த திரைப்படம் கண்ணுக்கு முன் நிறுத்தி காட்டியதால், கோமாளி குட் மார்க் வாங்கியது. இதன் பிறகு, ஒரு வெற்றியைக் கூட கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர்தான் முக்கிய கதாபாத்திரம் என்றாலும், அது குறிப்பிட்டு சொல்லும் வகையில் ஜெயம் ரவி படம் இல்லை என்று தான் கூற வேண்டும்.
2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்த, பூமி அகிலன் இறைவன் உள்ளிட்ட திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அதிலும் குறிப்பாக பூமி திரைப்படம் ரசிகர்களின் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. அண்மையில் அவர் நடித்து வெளிவந்த சைரன் திரைப்படமும் ஜொலிக்கவில்லை.
இயக்குனர் ராஜேஷை நம்பி அவர் நடித்த பிரதர் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகி காணாமல் போனது. இப்படியான சூழலிலும் ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை என்னும் திரைப்படத்தில் அவர் நடித்து முடித்து இருக்கிறார். இதே போல், ஜீனி என்னும் திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது டாடா இயக்குனர் கணேஷ் கே பாபு உடன் இணைந்து இருக்கிறார்.
வடசென்னையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது. தனது முதல் படத்தில் தந்தை மகனுக்கான உறவையும், காதலர்களுக்கு இடையேயான பிரிவையும் காட்டிய இயக்குனர் கணேஷ் கே பாபு, இந்த முறை வடசென்னை மண்ணை கையில் எடுத்திருக்கிறார். இதனால் அதன் மீதும், ஜெயம் ரவிக்கு வெற்றி படமாக அமையுமா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





