தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜீத்குமார். துணிவு படம் வெளியாகி 2 ஆண்டுகள் கடந்த நிலையில், வருகிற ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி படம் ரிலீஸாக உள்ளது. அதனால் தல பொங்கலாக இந்த பண்டிகையை கொண்டாட அஜீத் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் ஏற்கனவே தன்னை அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்க கூடாது. படத்தில் டைட்டில் கார்டில் அஜீத்குமார் என்று மட்டுமே போட வேண்டும். மேலும் தல என்றும் தன்னை அழைக்கக் கூடாது என அறிவித்திருந்தார். தனது ரசிகர் மன்றங்களையும் அஜீத்குமார் பல ஆண்டுகளுக்கு முன்பே கலைக்கவும் சொல்லி விட்டார்.
இந்த சூழலில், பொது இடங்களில், சினிமா தியேட்டர்களில், மக்கள் கூடும் பகுதிகளில் அஜீத்குமார் ரசிகர்கள் சிலர் கடவுளே அஜீத்தே என்று கோஷமிடுவது சமீபகாலமாக அதிகரித்தது. பலரும் இவ்வாறு கடவுளே அஜீத்தே என்ற கோஷமிடுவதை டிரண்டிங் ஆக்கியதால், அது மக்கள் மத்தியிலும் வைரலானது.
இந்நிலையில் கடந்த வாரத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகர் அஜீத்குமார், இப்படி பொதுவெளியில், மக்கள் கூடும் பொது இடங்களில் என் பெயரை குறிப்பிட்டு சில ரசிகர்கள் இப்படி கோஷமிடுவது எனக்கு கவலையும் வருத்தமும் அளிக்கிறது. தயவு செய்து இனிமேல் இப்படி யாரும் கோஷம் போடாதீர்கள் என்று வருத்தமாக அறிக்கையில் கூறியிருந்தார்.
நடிகர்கள் பலரும் ரசிகர்களை தங்கள் புகழ்பாடும் ஜால்ராக்களாக பயன்படுத்தி வரும் இன்றைய காலகட்டத்தில், தன்னை பற்றி இப்படி கோஷமிடும் ரசிகர்களை அறிக்கை வெளியிட்டு அஜீத்குமார் அறிவுறுத்தியதை தமிழ் சினிமா சார்ந்த பலரும் வரவேற்று பாராட்டினர். அஜீத்குமார் போலவே, நடிகர் கமல்ஹாசனும் தன்னை கலைஞானி, உலக நாயகன் என பட்டப் பெயர்களில் அழைக்க வேண்டாம் என கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜீத்குமாரின் அந்த திடீர் அறிக்கைக்கு காரணம் குறித்து இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி அமமுக தலைவர் டிடிவி தினகரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் கடவுளே அஜீத்தே என்று கோஷமிட்டுள்ளனர். அந்த வீடியோ பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இதுகுறித்து அஜீத்குமார் கவனத்துக்கு சென்ற பிறகுதான், அப்படி ஒரு அறிக்கையை அஜீத்குமார் உடனே வெளியிட்டார் என்றும் கூறப்படுகிறது.





