தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ராஜ்கிரண். ஆரம்பத்தில் சினிமா தயாரிப்பாளராக இருந்து பிறகு நடிகரானவர். என் ராசாவின் மனசிலே படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தவர், கடந்த பல ஆண்டுகளாக குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் ராஜ்கிரணை, தமிழ் சினிமாவில் ஏசியன் காதர் என்றால்தான் தெரியும். இசைஞானி இளையராஜா, கவிஞர் வாலி உள்ளிட்ட பலரும் காதர் பாய் என்றுதான் அவரை அழைப்பார்கள். பிறகு ராஜ்கிரண் என்று அவர் மாறியது எப்படி குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவரே கூறியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் ராஜ்கிரண் கூறியதாவது, தமிழ் சினிமாவில் நான் தயாரிப்பாளராக இருந்த ஆரம்பகாலத்தில் ஏசியன் பிக்சர்ஸ் என்னுடைய நிறுவனத்தின் பெயர். ஏசியன் காதர் என்றால் எல்லோருக்கும் தெரியும். என்னுடைய முழுப்பெயர் மொகைதீன் அப்துல் காதர். புரடியூசர், நடிகராகும் போது மொகைதீன் அப்துல் காதர் என்றால் அது தனிமைப்படுத்தப்பட்டது போல் தெரியும். அதனால் பொதுமைப்படுத்தும் விதமான ஒரு பெயரை வைத்துக்கொள்ள முடிவு செய்தேன்.
அப்போது என் நண்பர்களில் ஒருவர் ஜே சத்தம் பெயரில் வந்தால், பிரபலமாகலாம் என்று சொன்னார். ஜே என்ற சத்தம் வரும்படி பெயர் வை என்றார்கள். அதற்கு உதாரணமாக நேருஜி காந்திஜி ராஜாஜி எம்ஜிஆர் சிவாஜி ஜெயலலிதா ஜெய்சங்கர் கேஆர் விஜயா என்று சொன்னார்கள். இப்படி ஜே சத்தம் பெயரில் வந்தால் அங்கு பாப்புலாரிட்டி வரும் என்றனர்.
அதனால் ஜே சத்தம் பெயரில் வரவேண்டும் என்று மனதில் வைத்துக்கொண்டேன். என் கம்பெனிக்கு ரெட் சன் ஆர்ட் கிரியேசன்ஸ் என்று பெயர் வைத்திருந்தேன். ரெட் சன் என்றால் அதிகாலையில் உதிக்கிற சூரியன். உதய சூரியன். செங்குழம்பாக இருக்கிற அந்த சூரியனில் இருந்து வெளிவருகிற சூரிய கதிர்கள்தான் கிரண்.
நான் உள்ளே இருந்து சூரியன் மாதிரி வெளியே வர்றேன். அப்போ அந்த சூரிய கதிர்கள் மாதிரி நான் வெளியே பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் கிரணுடன் ராஜ் சேர்ந்து ராஜ்கிரண் என பெயர் வைத்துக்கொண்டேன் என்று தனது பெயருக்கு விளக்கம் தந்திருக்கிறார் நடிகர் ராஜ்கிரண். இப்போது தனுஷ் இயக்கத்தில் இட்லிக்கடை படத்தில் முக்கிய கேரக்டரில் ராஜ்கிரண் நடித்து வருகிறார்.





