நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை இயக்கியவர் தசெ ஞானவேல். இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. கடந்த 2021ம் ஆண்டில் கொரோனா தொற்று காலகட்டத்தில் உருவான இந்த படம், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில், நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
நடிகர் சூர்யா கடந்த 10 ஆண்டுகளில் நடித்த 10 திரைப்படங்கள் கங்குவா உட்பட, தியேட்டர்களில் வெளியாகி படுதோல்வி அடைந்த நிலையில், ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம் ஆகிய 2 படங்கள் மட்டுமே வணிகரீதியான வெற்றிப் படங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஜெய்பீம் பலவிதமான விமர்சனங்கள், சர்ச்சையை ஏற்படுத்திய படமாகவும் இருந்தது.
ஜெய்பீம் படத்துக்கு பிற இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கிய படம், ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா புரடக்சன்ஸ் தயாரித்த இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. ரஜினி இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் இந்தி நடிகர் அமிதாப் பச்சனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், பகத் பாசில், ராணா டகுபதி, அபிராமி, ரோகிணி, ரித்திகா சிங், கிஷோர், அசல்கோளாறு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் மொத்தம் 265 கோடி ரூபாய் வசூலித்த நிலையிலும், எதிர்பார்த்த அளவுக்கு படம் மிகப்பெரிய வெற்றியை அடையவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஆனால் பாடல்கள் பெரிய ஹிட் ஆகவில்லை.
வேட்டையன் படத்துக்கு எழுந்த எதிர்மறை விமர்சனங்களால் படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது என்பதும் உண்மை. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் தசெ ஞானவேல் கூறியதாவது, ஒரு படத்துக்கான நியாயமான விமர்சனம் என்பது இப்போது குறைந்து போய் விட்டது. வேட்டையன் படம் ரிலீஸான முதல் நாளில் இருந்தே படம் மோசமாக உள்ளது என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
இதனால் படம் பார்ப்பவர்களின் மனநிலையும் அப்படியே மாறிவிடுகிறது. அந்த வகையில் வேட்டையன் படத்துக்கு கள்ளிப்பால் கொடுத்து விட்டனர். படத்தில் நடிக்கும் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவரை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இப்போது சினிமா குறித்த விமர்சனங்களை முன்வைக்கின்றனர் என்று அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.





