தமிழ் சினிமாவில் நல்ல படங்களை தந்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் இயக்குனர் சேரன். பாரதி கண்ணம்மா சேரன் இயக்கத்தில் வெளியான முதல் படம். பார்த்திபன், மீனா, விஜயகுமார், ரஞ்சித், ராஜா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. பண்ணையார் வீட்டு பெண், தனது வீட்டு வேலைக்காரனை காதலிப்பதுதான் இந்த படத்தின் கதை.
தொடர்ந்து பொற்காலம், தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப், பொக்கிஷம் இன்னொரு தேசிய கீதம் வெற்றிக்கொடி கட்டு மாயக்கண்ணாடி உள்ளிட்ட பல நல்ல படங்களை தந்தவர் சேரன். ஒரு கட்டத்தில் அவரும் நடிகராகி விட்டார். அவர் இயக்கிய படங்களில் அவரே நாயகனாக நடித்தும், ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரிடம் இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்த சேரன் சொல்ல மறந்த கதை, முரண், ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் சேரன், தனது இயக்கத்தில் வெளியான பாரதி கண்ணம்மா படம் குறித்து பேசினார். அப்போது முரளி குறித்த சில விஷயங்களை சேரன் பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் சேரன் கூறியதாவது, நடிகர் முரளியை நான் நினைக்காத நாட்களே கிடையாது. ஒரு இயக்குனர் கஷ்டப்பட்டால் அவருக்கு பிடிக்காது. ஒரு இயக்குனர் படம் பண்ணாமல் இருந்தால் பிடிக்காது. ஒரு இயக்குனர் வீட்டு வாடகை தர முடியாமல் இருந்தால், பணத்துடன் வந்து விடுவார். சாப்பாட்டுக்கு காசு இல்லை என்றால் சோறு வாங்கி வந்து விடுவார்.
அப்படி ஒரு நல்ல குணம் கொண்ட சிறந்த மனிதர் முரளி. பாரதி கண்ணம்மா படத்தில் பார்த்திபன் கேரக்டரில் நடிக்க வேண்டியவர் முரளிதான். அப்போது அவருக்கு படங்கள் சரியாக இல்லாததால், மார்க்கெட் இல்லை. அதனால் தயாரிப்பாளர் ஹென்றி பார்த்திபனை நடிக்க வைத்தார்.
பாரதி கண்ணம்மா படத்தில் முரளி பண்ணவேண்டிய கேரக்டரில் பார்த்திபன் நடித்ததால், நான் பொற்காலம் படத்தில் முரளியை நடிக்க வைத்தேன். அந்த படத்தை தயாரித்த காஜா மொய்தீனுக்கும் முரளிக்கும் நல்ல பழக்கம் இருந்தது. அந்த நட்பு காரணமாக, முரளி பொற்காலம் படத்தில் நடித்தார் என்று இயக்குனர் சேரன் கூறியிருக்கிறார்.





